பாடசாலையிலிருந்து மாலை வீடு சென்று கொண்டிருந்த மாணவி, கோடரி வெட்டுக்கிலக்காகி, சம்பவ இடத்திலேயே பலியான சம்பவமொன்று, நேற்று மாலை ஹாலி-எலைப் பகுதியின் உடுவரை பெருந்தோட்டத்திற்கு செல்லும் பாதையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவமானது குறித்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்பட்ட தினத்திலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடுவரை பெருந்தோட்ட  கீழ்ப்பிரிவைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய தர்மராஜா நித்தியா என்ற மாணவியே, கோடரி வெட்டுக்கிலக்காகி கொலையுண்டவராவார்.

இம்மாணவி ஹாலி-எலை தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்று வந்தவராவார்.

இக் கொலை குறித்து, ஹாலி-எலை பொலிசாருக்கு தகவல் கிடைக்கவே, பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து, சடலத்தை மீட்டு ஆக்கப்பூர்வ விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் ஆரம்ப விசாரணையில், கொலையுண்ட மாணவியை, அதே தோட்டத்தைச் சேர்ந்த இராமையா திபாகரன் என்ற 32 வயது இளைஞன் காதலித்து வந்துள்ளார். இக் காதலை அம் மாணவி நிராகரித்ததினால், ஆத்திரம் கொண்ட அவ் இளைஞன் கோடரியினால் அம் மாணவியைத் தாக்கி கொலை செய்துள்ளமையும், நீண்ட காலமாக இரு குடும்பங்களுக்கிடையில் தகராறுகள் இருந்ததாகவும இரு வேறுபட்ட கருத்துக்களாக தெரியவந்துள்ளது.

பாதையில் கொலையுண்டிருந்த மாணவியின் சடலம், பதுளை பதில் நீதிபதி முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட வைத்திய பரிசோதனைக்கென, பதுளை அரசினர் மருத்துவமனை பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பாதையில் கொலையுண்டிருந்த மாணவியின் சடலம், பதுளை பதில் நீதிபதி முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட வைத்திய பரிசோதனைக்கென, பதுளை அரசினர் மருத்துவமனை பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

மேலும், இக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியையும், பொலிசார் அருகாமையிலுள்ள பற்றைக்குள்ளிருந்து மீட்டுள்ளனர்.

கொலைச் சந்தேக நபராக இனம் காணப்பட்ட, அதே தோட்டத்தைச் சேர்ந்த இராமையா திபாகரன் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலையுண்ட மாணவி, கல்வித் துறையில் சிறந்து விளங்கியவரென்று, அம்மாணவி கல்வி கற்று வந்த பாடசாலை ஆசிரியர் சமூகத்தினர் குறிப்பிட்டனர்.

தர்மராஜா நித்யா என்ற மாணவி வழமை போன்று பெற்றோரை விழுந்து வணங்கிவிட்டு, புத்தகப் பையையும் முதுகில் மாட்டிக் கொண்டு, 08-03-2022ல் காலை பாடசாலைக்கு வந்து, கற்கை கடமைகளை முறையாக மேற்கொண்டு, மாலை வீடு திரும்பும் போதே, மேற்படி அனர்த்தம் ஏற்பட்டது. தோட்டத் தொழில் துறையில் தொழிலாளர்களாக மாணவியின் பெற்றோர் ஈடுபட்டிருந்த போதிலும், தனது மகளை நல்லதொரு நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்ற நிலையில், பெற்றோர் எதிர்ப்பார்த்திருந்தனர்.

தமது வறுமை நிலையையும் அம் மாணவி அறியாத வகையில் பெற்றோர் தனது மகள் கல்வியில் உயர வேண்டுமென்ற ஒரே குறிக்கோலில் செயல்பட்டு வந்தனரென்றும், அம் மாணவி மீது எந்தவொரு தவறையும் தாம் காணவில்லையென்றும், அனைவரோடும் அன்பாகவும், பண்பாகவும் பேசி, அனைவரது ஆதரவையும் பெற்று வந்தவரென்றும் பட்டாம்பூச்சு போன்று காட்சி தருபவள் என்றும் தோட்ட மக்கள் பலரும் தெரிவித்தனர்.

பெற்றோரின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் தவிடு பொடியாகி, செய்தி கேட்டு, பதைபதைத்து ஓடி வந்து மகளின் சடலத்தைக் கண்டு மயங்கி விழுந்தனர். ஸ்தல விசாரணையின் போது, அங்கு கூடிய மக்கள், இம் மாணவியை கொடூரமாகக் கொலை செய்த பாதகனை உடனடியாகக் கைது செய்து, பகிரங்க தண்டனை வழங்க வேண்டுமென்றும் கோஷமிட்டதை அவதானிக்க முடிந்தது.

பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றிருக்கும் சந்தேக நபரைக் கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக, ஹாலி-எலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.