நேட்டோவில் இணைய விரும்பிய காரணத்தால்தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க முதன்மையான காரணமாக இருந்தது. தற்போதய போர் சூழலில் உக்ரைனுக்கு அமெரிக்க உதவாததால் நேட்டோ அமைப்பில் இணையும் எண்ணத்தைக் கை விட்டுவிடுவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr zelensky) தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 24 தேதி ரஷ்ய படையெடுப்பிற்கு முன்பாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினால் சுயாதீன பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இரண்டு ரஷ்ய ஆதரவு பகுதிகள் தொடர்பாக ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொள்ளவும் தயார் என கூறியுள்ளார்.

”நேட்டோ விவகாரம் தொடர்பாக நான் நீண்ட நாட்களுக்கு முன்பே ஒரு தெளிவிற்கு வந்து விட்டேன். உக்ரைனை ஏற்றுக் கொள்ள் ரஷ்யா தயாராக இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சர்ச்சைக்குரிய விசயங்கள் மற்றும் ரஷ்யாவுடனான மோதலுக்கு நேட்டோ நாடுகள் அஞ்சுகின்றன” என செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

நேட்டோவில் இணைவது குறித்து பேசிய செலன்ஸ்கி,

மண்டியிட்டுப் பிச்சை கேட்கும் ஒரு நாட்டின் அதிபராக இருக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

சோவியத் யூனியனிடம் இருந்து ஐரோப்பாவை பாதுகாக்க உருவாக்கபட்ட கூட்டணியான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பவில்ல என ரஷ்யா தெரிவித்திருந்தது.

சோவியத் யூனியன் பிளவுபட்ட பிறகு அதில் இருந்து பிரிந்த நாடுகளை உறுப்பினர்களாக நேட்டோ இணைத்துக் கொண்டது ரஷ்யாவிற்கு அதிருப்தியை வரவழைத்தது.

ரஷ்யாவின் எல்லைப்பகுதிகளில் ராணுவங்கள் குவிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், நேட்டோவின் விரிவாக்கத்தை ஒரு அச்சுறுத்தலாக கருதுகிறது.

உக்ரைன் மீது படையெடுத்து உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரஷ்யா, போருக்கு முன்பாக 2014 ஆண்டு முதல் உக்ரைனுடன் மோதலில் இருக்கும் ரஷ்ய ஆதரவு பகுதிகளான டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் பகுதிகளை குடியரசுகளாக அறிவித்தது.

இந்த சுயாதீன பகுதிகளின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என ரஷ்யா விரும்புகிறது.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த செலென்ஸ்கி, பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

”நான் பாதுகாப்பு உத்திரவாதங்கள் குறித்து பேசுகிறேன். அந்த பிராந்தியங்களை ரஷ்யா தவிர வேறு யாரும் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இந்த பிராந்தியங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்து சமரசத்திற்கு வரலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

”நான் முக்கியமானதாக கருதுவது என்னவென்றால், உக்ரைனின் பகுதியாக இருக்கும் அந்த பிராந்தியங்களின் மக்கள் எவ்வாறு வாழப் போகிறார்கள். உக்ரைனில் இருக்கும் மக்கள் அவர்களுடன் இணைந்திருக்கவே விரும்புகிறார்கள்” என செலென்ஸ்கி கூறியுள்ளார்.

”இன்னொரு தாக்குதலுக்கு நாங்கள் தயாராக இல்லை. எனவே ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தையைத் தொடங்க முன்வர வேண்டும். ஒட்சிசன் இல்லாமல் பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்திருப்பதை விட பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது” என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி  தெரிவித்துள்ளார்.