முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய நவீன உலகில் வாழ்க்கை முறை மாற்றத்தால் பல பிரச்சனைகளை நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம். அவற்றில் முதன்மையான பிரச்சனையாக கரு நின்று கர்ப்பம் தரிப்பதையும், அப்படியே கரு தரித்தாலும் முதல் மாதம் முதல் குழந்தை பிறப்பு வரையிலும், குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயதாகும் வரையிலும் பெற்றோர்களை நோக்கி வரிசைகட்டி வரும் பிரச்சனைகளையும் சொல்லலாம்.

அதிலும் குறிப்பாக ஏ.டி.எச்.டி, ஆட்டிசம், தாமதமான மைற்கற்கள் என குழந்தையின் வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமையால்தான் என்பதால், இனி எந்தவொரு வளர்ச்சி சார்ந்த கோளாறுகளிலும் குழந்தைகள் சிக்கிக்கொள்ளாமல் நன்முறையில் வளர்த்து எடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தக் கட்டுரை.

குழந்தைகளின் மூளை வளர்ச்சி…

*கருவுற்றது முதல் ஐந்து வயதிற்குள் குழந்தையின் மூளை வளர்ச்சி பின்வரும் வாழ்நாட்களில் இல்லாத அளவுக்கு அதிவேகமாக வளர்ச்சி பெறும்.

*இந்த காலக்கட்டத்தில் ஏற்படும் வளர்ச்சியே குழந்தைகளின் பள்ளியில், கல்லூரியில் என வாழ்க்கை முழுக்க பிரதிபலிக்கும்.

*இக்காலக்கட்ட வளர்ச்சிதான் அவர்களின் வெற்றி தோல்விகளை, கற்கும் திறனை நிர்ணயிக்கும்.

*குழந்தைகளுக்கு முதல் ஐந்து வருடங்களிலிருந்து ஏற்படும் அனுபவங்களின் தரம்தான் அவர்களின் மூளையையும் ஆளுமையையும் மெருகூட்டும் என்பதால், நாம் நம்மை சுற்றியிருக்கும் குழந்தைகளுக்கு தரும் அனுபவங்கள் நல்லதாகவும் இருக்கலாம் தீயதாகவும் இருக்கலாம் என்பதை உணர வேண்டும்.

*90 சதவிகித மூளை வளர்ச்சி கிண்டர் கார்டன் செல்லும் முன்னே நிகழ்ந்துவிடும் என்பதால் பெற்றோர்கள் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள மற்ற உறவுகளுக்கும் விழிப்புணர்வு அவசியம் தேவை.

*குழந்தை பிறக்கும்போது சராசரி மனித முளையின் கால் பங்கு அளவில் பிறக்கும். பின் பிறந்த முதல் வருடத்திலேயே வளர்ச்சி இருமடங்காகும். மூன்று வயதிற்குள் வளர்ந்த மனித மூளையின் 80 சதவிகித அளவை தொட்டிருக்கும். பின் ஐந்து வயதாகும்போது கிட்டத்தட்ட 90 சதவிகிதம் வளர்ந்து இருக்கும் என்பதால், நம் பிள்ளைகளின் வாழ்வை செதுக்கும் ‘கோல்டன் வருடங்கள்’ என இந்த வருடங்களை சொல்லலாம்.

மூளையில் என்ன நடக்கும்…?

*மூளைதான் நம் மொத்த உடம்பையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும். எனவே அப்படிப்பட்ட மூளை திறம்பட வேலை செய்ய ‘மூளை செல்கள்’ தேவை.

*Neuron என்று சொல்லப்படும் இந்த மூளை செல்கள் பிறந்த குழந்தையின் மூளையில் ஏற்கெனவே அமைந்திருக்கும். ஆனால் ஒன்றோடு ஒன்று இணைந்து (Connection) இருக்காது.

*எனவே செல்கள் சேர்ந்திருந்தால்தான் மூளை வேலை செய்யும். மனித மூளை போல் யோசிக்க, பேச, பழக என நாம் செய்யும் அனைத்தையும் குழந்தைகளால் செய்ய முடியும்.

*குறைந்தது ஒரு மில்லியன் புது செல் இணைப்புகளாவது ஒவ்வொரு நொடிக்கும் குழந்தையின் மூளைக்குள் நிகழும் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

என்ன பிரச்சனைகள் வரலாம்…?

*ஆட்டிசம், ஏடிஎச்டி, தாமத நடை, தாமதப் பேச்சு, அறிவுத் திறன் குறைந்து காணப்படுவது என பல பிரச்சினைகள் வரலாம்.

தாமத படிநிலைகள்

குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவு உண்டால் உடல் நல்ல தெம்பாக புஷ்டியாக இருக்கும். ஆனால் படுத்திருக்கும் குழந்தைக்கு கழுத்து நிற்பது, தவழ்வது முதல் நடப்பது ஓடுவது வரை இருக்கும் வளர்ச்சியை ‘வளர்ச்சி மைற்கற்கள்’ (Developmental Milestones) என்று மருத்துவத்தில் சொல்வோம். இந்த வளர்ச்சிப் படிகள் சீராக ஒவ்வொரு மாதமும் நடக்கிறதா என்பதனை உறுதிசெய்ய வேண்டியது நம் கடமை.

மன மற்றும் அறிவுத்திறன் குறைபாடு

குழந்தை முதலில் அம்மாவை மட்டுமே அடையாளம் கண்டு சிரிக்கும். பின் படிப்படியாக பொருட்களை பார்ப்பது, அதனை எடுக்க முற்படுவது என ஆரம்பித்து மற்றவர்களுடன் பேசிப் பழகுவது, விளையாட்டுகளில் கற்பனையை உருவாக்கி (உதாரணமாக, தன்னை பள்ளி ஆசிரியர் என பாவிப்பது) விளையாடுவது என பல்வேறு மனம் மற்றும் அறிவுத் திறன் சார்ந்த வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதனை உறுதிசெய்து கொள்வதும் நம் கடமையே.

ஆட்டிசம்

ஆட்டிசம் என்பது சாதாரணமான மூளை வளர்ச்சியை பாதிக்கக்கூடிய ஓர் உளவியல் சார்ந்த வளர்ச்சிக் குறைபாடு. இது ஒருவருடைய மன வளர்ச்சி மற்றும் அறிவுத் திறன் வளர்ச்சியை பாதிக்கலாம். அதனால் தன் உலகத்தில் மட்டுமே கவனத்தை செலுத்தி பிறர் கூப்பிட்டால் பார்க்காத, பிறரிடம் பழக விரும்பாதவாறு அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும்.

ஏடிஎச்டி

Attention Deficit Hyperactive Disorder (ADHD) என்று சொல்லப்படுவது ‘கவனக் குறைவு மிகை இயக்க செயல்பாடு’. இதில் குழந்தைகளின் கவனம் சிதறும். விளையாடுவது, படிப்பது, பிறருடன் பேசுவது என எதை எடுத்துக்கொண்டாலும் அவர்களின் கவனம் நிலையில்லாமல் மாறிக்கொண்டே இருக்கும். மேலும் இரண்டு நிமிடம் கூட ஓரிடத்தில் உட்காராமல் துறுதுறுவென சுற்றிக்கொண்டே இருப்பது போன்ற அறிகுறிகள் தெரியும்.

எப்படி கண்டறிவது…?

*குழந்தைகளின் வளர்ச்சியை தொடர்ந்து நாம் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
*எந்தெந்த வயதில் குழந்தைகள் என்னென்ன செய்வார்கள் என்பதனை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

*குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் மாற்றம் இருப்பின் குழந்தை நல மருத்துவர் அல்லது இயன்முறை மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

தீர்வுகள் என்ன…?

மேல் சொன்ன அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி, தாமத படிநிலைகள், ஆட்டிசம், ஏடிஎச்டி குறைபாடு இருக்கிறதா எனக் கண்டறிந்து அவற்றுக்கான போதிய சிகிச்சை வழங்கவேண்டும்.இவற்றில் ஆட்டிசம் குறைபாட்டை முழுமையாக குணப்படுத்த முடியாது என்பதையும், மற்ற எல்லாவற்றையும் குணப்படுத்தலாம் என்பதையும், ஆட்டிசம் குறைப்பாட்டை கட்டுக்குள் கொண்டு வந்து குழந்தைகளை தினசரி வாழ்க்கைக்கு தயார் செய்ய முடியும் என்பதையும் நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.

பேச்சு தாமதம் இருந்தால் Speech Therapist எனும் பேச்சுவியல் நிபுணர் குழந்தை பேசுவதற்கு பயிற்சி கொடுப்பர். கற்றல் திறன் குறைபாடு இருந்தால் Special Educator என்று சொல்லப்படும் சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் தொடர்ந்து பயிற்சி கொடுப்பார்கள்.

தடுக்க வழிகள்…

சில நேரங்களில் காரணம் தெரியாமல் அல்லது வேறு காரணங்களால் மேல் சொன்ன குறைபாடுகள் வரலாம். உதாரணமாக, மூளை வாதத்தினால் நிற்கவும் நடக்கவும் தாமதம் ஆகும். இவ்வாறு இல்லாமல் வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படாமல் தவிர்க்க உதவும் வழிகளை பார்ப்போம்.

* குழந்தைகளுடன் நாம் நேரம் செலவிட வேண்டும்.

* குழந்தைகளை அடிக்கடி வெளியே கூட்டிச் செல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக மால்கள், உணவகங்கள், திரையரங்குகள் என்றில்லாமல் கோயில்கள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் என கூட்டிச் செல்லலாம்.

* மற்ற குழந்தைகளுடனும், மற்றவர்களுடனும் (அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள்) குழந்தைகளை பழகவிட வேண்டும்.

* தொலைக்காட்சி, கைப்பேசி, கணினி போன்றவற்றை 90 சதவிகிதம் குழந்தைகளிடமிருந்து தவிர்க்க வேண்டும்.

* விதவிதமான பொருட்களை தினமும் குழந்தைகளுக்கு தர வேண்டும். பொம்மைகள் தான் என்றில்லை உணவுப் பாத்திரங்கள், பழைய பர்ஸ் என ஆபத்து இல்லாத எந்தவொரு பொருளையும் தரலாம்.

* தெரிந்த பழகிய விளையாட்டுகளையே விளையாடச் சொல்லாமல் புதுப்புது விளையாட்டுக்களை சொல்லித்தந்து விளையாட வைக்கலாம். முடிந்தால் நாமும் அவர்களுடன் சேர்ந்து விளையாடலாம்.

* குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் உள்ளது என்பதை தெரிந்துகொண்டு அவை சார்ந்து அவர்களை இன்னும் ஊக்குவிக்கலாம்.

மொத்தத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான, அதேநேரம் இனிதான செயல் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து அதற்கேற்ப நம்மை தயார்படுத்திக்கொண்டால் நிச்சயம் ஆளுமை மிக்கவர்களாக குழந்தைகளை உருவாக்கித் தரமுடியும் என்பது உறுதி.