ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை மீளப்பெறுவதற்கு மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
பைஸால் காசிம், எம்.எஸ்.தௌபீக் மற்றும் இஷாக் ரஹுமான் ஆகிய மூவருமே மொட்டு அரசுடனான ‘அரசியல் உறவை’ இன்று முதல் இவ்வாறு முறித்துக்கொண்டுள்ளனர்.
எம்.எஸ்.தௌபீக், 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி , ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலின்கீழ் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
தொலைபேசி சின்னத்தின்கீழ் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கிய மு.கா. உறுப்பினரான பைஸால் காசிமும், மக்கள் ஆணையை பெற்று சபைக்கு தெரிவானார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி, இஷாக் ரஹுமான், ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிநடைபோட்டார்.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் 7 நாடாளுமன்ற உறுப்பினர் , அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அரசுக்கு நேசக்கரம் நீட்டினர்.
இவர்களில் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. எஸ். எம். எம். முஸ்ஸாரப்புக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
9 ஆவது நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிரணி, மற்றும் தேசியப்பட்டியல் நியமனம் என மொத்தம் 20 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்களில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா. தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் எம்.பிக்களான கபீர் ஹாசீம், அப்துல் அலீம், முஜிபுர் ரஹுமான், எஸ்.எம். மரிக்கார், இம்ரான் மஹ்ரூப் மற்றும் இம்தியாஸ் பாகிர் மாகார் ஆகியோரும் பிரேரணைக்கு ஆதரவை தெரிவித்து கையொப்பம் இட்டுள்ளனர்.
அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள முஸ்லிம் மூவரும், அவர்கள் சார்ந்த கட்சிகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவார்கள் என தெரியவருகின்றது. ( 20 ஐ ஆதரித்ததால் கட்சியில் இருந்து அவர்கள் இடைநிறுத்தப்பட்டாலும், அடிப்படை உறுப்புரிமை இன்னும் நீக்கப்படவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய புள்ளிகளில் ஒருவராகக் கருதப்படும் எச்.எம்.எம். ஹரீசும், மக்கள் பக்கம் நின்று பிரேரணையை ஆதரிக்கும் முடிவை எடுப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மொஹமட் முஸம்மிலும், தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாவும் 11 கட்சிகள் எடுக்கும் தீர்மானத்துக்கமையவே செயற்படுவார்கள் என நம்பப்படுகின்றது.
அதேவேளை, நிதி அமைச்சர் அலி சப்ரி, சுற்றுச்சுழல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் , இராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான், முஷாரப், மற்றும் ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோர், நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பார்கள். புத்தளம் மாவட்ட அலி சப்ரிவும் அரசை ஆதரிக்கக்கூடும
இணைந்திருங்கள்