டந்த 09ஆம் திகதி உருவெடுத்த வன்முறைக் கலவரத்தின் விளைவாக நாட்டின் இயல்பு நிலை இன்று (12.05.2022) நான்காவது நாளாகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நாட்டில் நாளை ஐந்தாவது நாளாகவும் ஊடரங்கை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அலரி மாளிகைக்கு முன்பாகவும் காலிமுகத்திடலிலும் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக நாடு ஒருவித பதற்ற நிலைமைக்கு உள்ளாகியுள்ளது. இதன் விளைவாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 09 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு வாகனங்களுக்கு தீ வைத்த 41 சம்பவங்களும், வாகனங்களை சேதப்படுத்திய 61 சம்பவங்களும், சொத்துகளை சேதப்படுத்திய 136 சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

வன்முறையுடன் கூடிய கலவரத்தின் விளைவாக முன்னாள் பிரதமரின் இல்லம், அவரது பூர்வீக இல்லம் மற்றும் பல அமைச்சர்களதும் பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களதும் இல்லங்களும் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அவை மாத்திரமல்லாமல் முன்னாள் பிரதமரது தந்தையான டி.ஏ. ராஜபக்‌ஷவின் உருவச் சிலை மற்றும் அவரது அரும்பொருட்காட்சியகம் என்பனவும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கலவரத்தின் விளைவாக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாடு கோடிக்கணக்கான பெறுமதி மிக்க சொத்து இழப்புக்கு முகம் கொடுத்துள்ளது. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததும், நியாயப்படுத்த முடியாததுமான கண்டிக்கத்தக்க இழப்பாகும்.

வன்முறைச் சம்பவங்கள் காரணமாக நாட்டுக்கும் மக்களுக்கும் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணத்தினால் வன்முறையில் ஈடுபட்டோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சட்ட மாஅதிபர் சஞ்ஜய் ராஜரத்தினம், ‘காலிமுகத் திடல் போராட்ட மைதானத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்ப்பற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறும், அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸ் மாதிபருக்கு எழுத்து மூலம் பணிப்புரை விடுத்திருக்கின்றார்.

இவ்வன்முறையுடன் கூடிய கலவரச் சம்பவம் குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரும் பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் முன்னாள் பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரிவின் தலைவர், குறித்த தினத்தன்று அலரி மாளிகையில் நிகழ்வை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை பலரும் வரவேற்றுள்ளனர்.

இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும். அதுவே அமைதியையும் சமாதானத்தையும் விரும்புகின்ற மக்களின் விருப்பமாக உள்ளது. வன்முறைகள் எந்தவொரு வடிவில் இடம்பெற்றாலும் அவை கண்டிக்கப்பட வேண்டியவையாகும். வன்முறைகள் ஒருபோதும் அமைதியை ஏற்படுத்தி விடப் போவதில்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் இந்த மண்ணில் எதிர்காலத்தில் இனியொரு போதும் இடம்பெறாத வகையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதுவே இவர்கள் தோற்றுவித்த வன்முறையின் விளைவாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நம்பிக்கை தரும் நிவாரணமாக அமையும் என்பதுதான் மக்களது கருத்தாக உள்ளது.

ஏனெனில் வன்முறைகள் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது. அமைதி ஏற்பட வேண்டுமென்பதே மக்களின் வேண்டுதலாக இருக்கின்றது. ஆகவே நாட்டின் சட்டம், ஒழுங்கை எவரும் தமது இஷ்டப்படி கையில் எடுத்து செயற்படக் கூடாது. அதற்கான முயற்சியிலும் கூட ஈடுபடலாகாது. அவற்றை மதித்து கௌரவித்து செயற்படுவதே குடிமக்களின் பொறுப்பும் கடமையுமாகும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வது இன்றியமையாத விடயம்.