இலங்கை பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க மே 16ஆம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நிலைமையை சாமளிக்க ரூபாய் தாள்கள் அச்சிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் நடந்த போராட்டங்கள் காரணமாக, மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகியபின் பதவியேற்ற ரணில் தற்போதைய சிக்கல்களுக்கு என்ன தீர்வைத் தரப்போகிறார் என்று இலங்கை மட்டுமல்லாது உலகமே எதிர்நோக்கியுள்ள சூழலில் இவ்வாறு கூறியுள்ளார்.

”விருப்பமில்லாமலேனும் இந்த நிலையில் பணத்தை அச்சிட்டுவதற்கான அனுமதியை வழங்க வேண்டியுள்ளது. அரச ஊழியர்களின் இந்த மாதத்திற்கான சம்பளத்தை செலுத்துவதற்காகவும், அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு செலவிட வேண்டியுள்ளமைக்காகவும் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது,” என்று கூறியுள்ளார்.

பணத்தை அதிகம் அச்சடித்தால் என்னாகும்?

ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி, வறுமை போன்ற சூழல் நிலவுகிறது என்றால் அந்நாட்டு அரசிடமும், மக்களிடமும் போதிய பணம் இல்லை என்று பொருள்.

அப்படியானால், ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்பில் கூறியுள்ளத்தைப் போல அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டின் நாணயத்தை (கரன்சி) அச்சிடுவதன் மூலம் ஏன் தங்கள் பிரச்னைகளையும், மக்களின் பிரச்னைகளையும் தீர்த்துக்கொள்ளக் கூடாது?

அதற்கும் ரணில் ஆற்றிய உரையிலேயே பதில் உள்ளது.

“ரூபாயின் மதிப்பு மேலும் சரியும், மின்வெட்டு அதிகரிக்கும்” – புள்ளி விவரங்களுடன் விளக்கிய ரணில்
தன்னை ‘க்ருஷா’ கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு ரணில் பேசியது என்ன? சுவாரசிய கதை

”பணம் அச்சிடுகின்றமையினால், ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்,” என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதே அந்த பதில்.

அதாவது அளவுக்கும் அதிகமாக ஒரு நாடு தனது பணத்தை அச்சிடுகிறது என்றால் அந்த பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடையும். வீழ்ச்சி என்றால் நாணய மதிப்பில் உண்டாகும் வழக்கமான சரிவல்ல. இந்த சரிவு ஏன் உண்டாகிறது என்று பாப்போம்.

இலங்கையில் பணத்தை அச்சிடும் அதிகாரம் மத்திய வங்கியிடம் மட்டுமே உள்ளது.

ஒரு பொருளை வாங்க வேண்டும் அல்லது ஒரு சேவையைப் பெற வேண்டும் என்றால் அந்தப் பொருளையோ சேவையையோ பெறுபவர் அதற்கான பணத்தைக் கொடுக்க வேண்டும். அதுதான் அதன் ‘விலை’ என்று கூறப்படுகிறது.

ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருளின் உள்ளடக்க விலை (தயாரிப்புச் செலவு), சந்தையில் அதற்கு இருக்கும் தட்டுப்பாடு, வேறு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் அதே பொருளின் விலை, வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன், அரசு விதிக்கும் வரி, சந்தைப்படுத்தலுக்கு உள்ளாகும் செலவு உள்ளிட்ட பல காரணிகள் அந்த விலையை நிர்ணயிக்கின்றன.

ஒரு வேளை பணம் அச்சடிக்கப்பட்டு எல்லோருக்கும் வழக்கப்படுகிறது என்றால், சந்தையில் இருக்கும் பொருட்கள் அல்லது சேவைகள் ஆகியவற்றைப் பெற எல்லோரிடத்திலும் பணம் இருக்கும்.

ஆனால், எல்லோருக்கும் கொடுக்கும் அளவுக்கு அந்தப் பொருள் இருக்காது. அதாவது சந்தையில் அதன் தட்டுப்பாடு அதிகரிக்கும்.

இப்போது அந்தக் குறிப்பிட்ட பொருளை வாங்க விரும்புவோரில் யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் அது கிடைக்கும்.

எல்லோரிடத்திலும் பணம் இருக்கிறது என்பதால் எல்லோருமே இப்போது அதிகமான பணத்தைக் கொடுக்க முன்வருவார்கள்.

ஒருவரைவிட ஒருவர் அதிகம் பண கொடுத்து வாங்க முயல்கிறார், அவரைவிட இன்னொருவர் அதிகம் பணம் தர முயல்கிறார், மற்றோருவர் இன்னும் கூடுதலாகப் பணம் கொடுக்க முயல்கிறார் என்றால் அப்பொருளின் விலை அதிகரித்துக்கொண்டே போகும்.

இறுதியாக யாரிடத்திலும் மேலதிக பணம் இல்லை எனும் சூழல் வரும்போது அப்பொருளின் விலை பன்மடங்கு அதிகரித்திருக்கும்.

எடுத்துக்காட்டாக நீங்கள் வழக்கமான பணப்புழக்கம் இருந்த நேரத்தில், ஒரு கிலோ அரசியை 50 ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

பணம் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்தபின் அதன் விலை 100 ரூபாயாகவோ, 500 ரூபாயாவோ, ஏன் 5,000 ரூபாயாகவோ கூட உயர்ந்திருக்கலாம்.

முன்னர் நீங்கள் ஒரு விலை கொடுத்து எவ்வளவு அரிசி வாங்கினீர்களோ, இப்போது அதே அளவு அரிசியை வாங்க கூடுதலாக விலை கொடுக்க வேண்டி உள்ளது.

இதை வேறு சொற்களில் சொல்வதானால், பணத்துக்கு மதிப்பு குறைந்துவிட்டதால் கூடுதலான பணத்தை அதே ஒரு கிலோ அரிசிக்குச் செலவிடுகிறீர்கள்.

இந்த விலை உயர்வுதான் பொருளாதாரத்தில் ‘பணவீக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில் இலங்கையில் 30% பணவீக்கம் உண்டாகியுள்ளதாக அலுவல்பூர்வ தரவுகள் கூறினாலும், சில பொருட்களின் விலை 100% முதல் 400% வரை உயந்துள்ளது.

கடந்த ஓராண்டில் இலங்கையில் 30% பணவீக்கம் உண்டாகியுள்ளதாக அலுவல்பூர்வ தரவுகள் கூறினாலும், சில பொருட்களின் விலை 100% முதல் 400% வரை உயந்துள்ளது.

ஒரு பொருளை உற்பத்தி செய்ய அல்லது சேவையை வழங்கத் தேவையான மூலப் பொருட்களின் விலையேற்றம், பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரிப்பு, அரசின் நிதிக்கொள்கை உள்ளிட்டவை இந்தப் பணவீக்கத்தை முடிவு செய்யும்.

ஒரு நாடு எவ்வளவு பணத்தை அச்சடிக்க வேண்டும்?

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பொறுப்பேற்றதும் இலங்கை அரசு எடுத்த ஒரு நிதிக் கொள்கை முடிவு ஒன்று அவ்வாறு பணவீக்கத்தின் மீது ஓர் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கியது.

‘புதிய பணவியல் கோட்பாடு’ (Modern Monetary Theory) எனும் ஒரு பொருளாதாரக் கோட்பாட்டின்கீழ் பணத்தை அச்சடிக்க முடிவு செய்தது மஹிந்த ராஜபக்ஷ அரசு.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, மத்திய வங்கியிடம் (இந்தியாவின் ரிசர்வ் வங்கி போல ) இருக்கும் அந்நியச் செலாவணி (foreign exchange), தங்கம், வெள்ளி போன்றவற்றின் கையிருப்பு (bullions), பற்று வரவு சமநிலை (ஒரு நாடு வெளிநாடுகளுக்கு செலுத்தவேண்டிய பணத்துக்கும் வெளிநாடுகள் அதற்கு செலுத்தவேண்டிய பணத்துக்கும் இடையிலான வேறுபாடு – இதை ஆங்கிலத்தில் ‘Balance of Payments’ என்கிறார்கள்) ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எவ்வளவு பணத்தை அச்சிடுவது என்பதை ஒவ்வொரு நாடும் முடிவு செய்யும்.

ஆனால், புதிய பணவியல் கோட்பாட்டில் மேற்கண்ட காரணிகள் பரிசீலிக்கப்படுவதில்லை.

அரசு தாம் விரும்பும் அளவு பணத்தை அச்சிட்டுக்கொண்டாலும் பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்தக் கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்த கோட்பாட்டை பெரும்பாலான பொருளியல் அறிஞர்கள் ஏற்பதில்லை.

இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பிழையான முடிவு என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறையின் மூத்த விரிவுரையாளர், முனைவர் முருகேசு கணேசமூர்த்தி.

அமெரிக்க டாலர் போன்ற நாணயங்கள் அப்பணத்தை வெளியிடும் நாடுகளில் மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் புழக்கத்தில் உள்ளன.

எனவே, அமெரிக்கா கூடுதலான பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விட்டாலும், அமெரிக்காவுக்குள் பணவீக்கம் ஏற்படாது.

ஆனால், இந்திய ரூபாய், இலங்கை ரூபாய் போன்ற நாணயங்கள் அவற்றை வெளியிடும் நாடுகளுக்கு உள்ளேயே புழக்கத்தில் உள்ளன.

எனவே, உற்பத்தி பெருக்கம், டாலர் கையிருப்பு போன்றவை இல்லாமல் கூடுதலாகப் பணத்தை அச்சிட்டால் பணவீக்கம் ஏற்படும் என்று கூறுகிறார் முருகேசு கணேசமூர்த்தி.

கடந்த காலத்தின் கசப்பான எடுத்துக்காட்டுகள் – ஜிம்பாப்வே, வெனிசுவேலா

அவர் குறிப்பிடுவதைப் போல இத்தகைய நிலை கடந்த காலங்களில் வேறு சில நாடுகளிலும் நடந்துள்ளன.

பணம் கிட்டதட்ட மதிப்பே இல்லாமல் போனதால் 2018 ஆகஸ்டில் ஒரு கிலோ இறைச்சி வாங்க வெனிசுவேலாவில் தேவைப்பட்ட பொலிவாரின் அளவு.

பணம் கிட்டதட்ட மதிப்பே இல்லாமல் போனதால் 2018 ஆகஸ்டில் ஒரு கிலோ இறைச்சி வாங்க வெனிசுவேலாவில் தேவைப்பட்ட பொலிவாரின் அளவு.

கடந்த 2018ம் ஆண்டு வெனிசுவேலா பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, அந்நாட்டு அரசு பொருளாதாரக் காரணிகளைப் பொருட்படுத்தாமல் பணத்தை அச்சடித்ததால் பண வீக்கம் உண்டாகி அதன் நாணயமான பொலிவாரின் மதிப்பு அதீதமாக சரிந்தது.

அதன் எதிரொலியாக பணவீக்கம் 2018 நவம்பரில் அதற்கு முந்தைய 12 மாதங்களுக்கு முந்தைய விலை நிலவரத்துடன் ஒப்பிடும்போது 13,00,000% ஆனது என்று அந்நாட்டின் நாடாளுமன்றமான ‘தேசிய சபை’ சொன்னது.

அதாவது ஒரு பொலிவாருக்கு விற்ற பொருளில் விலை 12 மாதங்களில் 13 லட்சம் பொலிவார் ஆனது.

இது அதீத பணவீக்கம் (hyperinflation) எனப்படுகிறது. இதன்பின்னர் அதன் நாணயத்தில் இருந்து ஐந்து பூஜ்ஜியங்களை நீக்கியது அந்நாட்டு அரசு. அதாவது 5 லட்சம் பொலிவாரின் மதிப்பு 5 பொலிவார் என்று மாற்றப்பட்டது.

அதற்கு முன்னர் ஜிம்பாப்வேயிலும் இதே போல நடந்துள்ளது. ஜூலை 2008ல் பொருளாதார சரிவின் அதலபாதாளத்தில் ஜிம்பாப்வே இருந்தபோது அங்கு நிலவிய வருடாந்திர பணவீக்க விகிதம் 23,10,00,000 %. (23 கோடியே 10 லட்சம் சதவிகிதம்.)

அதே ஆண்டு நவம்பர் மாதம் பண வீக்கம் 80,00,00,00,000 % (எட்டாயிரம் கோடி சதவிகிதம்) ஆனது. கிட்டத்தட்ட ஜிம்பாப்வே டாலர் மதிப்பிழந்து போய் வெற்றுக்காகிதம் ஆனது என்றே சொல்லலாம்.

இதன் பின்னர் 2009ஆம் ஆண்டு தென்னப்பிரிக்க ராண்ட், அமெரிக்க டாலர் உள்ளிட்டவற்றை அந்நாடு பணப்புழக்கத்துக்காகப் பயன்படுத்தியது.

ஜிம்பாப்வே டாலரை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக 2019 ஜூன் மாதம் வெளிநாட்டு கரன்சிகளுக்கு அந்நாடு தடை விதித்தது.

தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒரு சேர எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிநாட்டு கரன்சிகளில் பரிவர்த்தனை செய்ய அரசு மீண்டும் அனுமதித்தது.

இன்னும்கூட ஜிம்பாப்வே டாலர் உலக அளவில் மதிப்பு குறைந்த நாணயங்களில் ஒன்றாக உள்ளது.

ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 360 ஜிம்பாப்வே டாலருக்கும் மேல் என்பது சமீப நாட்களின் நிலை. கிட்டத்தட்ட இலங்கை ரூபாயும் இதே அளவில்தான் அமெரிக்க டாலருக்கு நிகராகப் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும், அரசின் அன்றாடச் செலவுகளுக்கே பணம் இல்லாதபோதும் இலங்கை அரசுக்கு வேறு வழி இல்லை என்பதால் பணம் அச்சடிக்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இலங்கை ரூபாய், அமெரிக்க டாலர் – இனி என்ன நடக்கும்?

”இலங்கை அரசு பணத்தை அச்சிடலாம் என்று எடுத்துள்ள முடிவு தற்காலிக நிவாரணம் மட்டுமே கொடுக்கும்.

ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் அதை நிறுத்தாவிட்டால் இலங்கை ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்து பணவீக்கம் ஏற்படும். இலங்கை பெரும்பாலான உணவுப் பொருட்களுக்கு இறக்குமதியை நம்பியுள்ள நாடு.”
இலங்கை ரூபாய் தாளில் இருக்கும் படம்.

இலங்கை ரூபாய் தாளில் இருக்கும் படம்.

”பண வீக்கம் ஏற்பட்டு நாணய மதிப்பு சரிவடைந்தால் உணவுப் பொருட்களைத் தேவையான அளவு இறக்குமதி செய்ய முடியாமல் பட்டினிச்சாவு உண்டாகும் நிலை கூட ஏற்படலாம்.

ஆனால் உலக வங்கியிடமிருந்து 160 மில்லியன் அமெரிக்க டாலர் கடனாக கிடைப்பதற்கான வாய்ப்பு தற்போது உள்ளது.

அந்தப் பணம் இலங்கை அரசுக்கு கிடைத்து நிலைமை ஓரளவு சரியாகும் போது வெளிநாட்டு வர்த்தகம் தொடங்கும்.

அப்பொழுது ஏற்றுமதியாளர்கள் மூலம் டாலர் உள்வருகை நிகழும். அப்பொழுது இலங்கை ரூபாயை அளவுக்கு அதிகமாக அச்சிடுவடுவதை நிறுத்த வேண்டும்,” என்று முருகேசு கணேசமூர்த்தி கூறுகிறார்.

மத்திய வங்கியிடம் இருக்கும் டாலர் கையிருப்பு அடிப்படையிலேயே இலங்கை ரூபாய் அச்சிடப்படுவது இலங்கையில் வழக்கமாக இருந்தது.

எவ்வளவு டாலர் கையிருப்பு உள்ளதோ, அந்த அளவு பணத்தை அச்சிட்டு விநியோகிக்க வேண்டும் என்பதைக் கண்காணிக்கும் நாணய சபை முறை (Currency Board System) மீண்டும் வேண்டும் என்ற குரல்களும் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன.

இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளின் மூலக் காரணங்களில் இருப்பது டாலர் பற்றாக்குறைதான்.

கடன் மூலம் டாலர் உள்வரவு நிகழுமென்றாலும், முன்பைப்போலவே அந்நியச் செலாவணி தொடர்ந்து இலங்கைக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

தற்போதைய யுக்ரேன் – ரஷ்ய போர், இலங்கையின் வர்த்தகக் கூட்டாளி நாடுகளில் உண்டாகியுள்ள பொருளாதார மந்தநிலை உள்ளிட்டவை இதற்குக் காரணமாக இருக்கும்.

போதுமான அளவு டாலரில் வரவு இல்லாத சூழலில் வேறு ஒரு நாணய முறை உருவாகவும் இலங்கையில் வாய்ப்புண்டு.

தங்கள் நாட்டு நாணய மதிப்பு வீழ்ந்து, பணவீக்கம் உண்டானபின் அமெரிக்க டாலர் அல்லது அண்டை நாட்டு நாணயங்களை புழக்கத்திற்கு ஏற்றுக்கொண்ட நிகழ்வுகள் வரலாற்றில் உள்ளன. இலங்கை அந்த நிலையை நோக்கிப் போகுமா என்று இப்போதே கூறுவது கடினம்.

ஆனால், ஒன்றை மட்டும் இப்போது உறுதியாகக் கூற முடியும். இலங்கை இன்னும் எதிர்கொள்ள வேண்டிய சோதனைகள் இன்னும் ஏராளம் உள்ளன.