ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கை என்பது வாயால் வடை சுடும் பொருளாதார கொள்கை எனவும் அந்த பொருளாதர கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தற்போது இலங்கை ஜப்பானாக மாறி இருக்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த உண்மையை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் பணத்தை அச்சிடவும், கடனை பெறவும் இருப்பவற்றை விற்பனை செய்வதற்கு ரணில் விக்ரமசிங்க எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் புதிய நிதியமைச்சராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சில சம்பவங்கள் நடந்ததால், நாம் அவற்றை தலையெழுத்து என்று சொல்வோம்.
2015 ஆம் ஆண்டில் இருந்து சில காலம் ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்தாலும் இலங்கை மத்திய வங்கி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்தது.
ரணில் நாட்டின் வளங்களை விற்பனை செய்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றார். ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்ய முயற்சித்தார்.
கொழும்பு நகரில் உள்ள பெறுமதியான காணிகளை விற்பனை செய்ய திட்டமிட்டார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய திட்டமிட்டார்.
பல பொருளாதார மாநாடுகளுக்கு சென்று ரணில் உரையாற்றி இருந்தாலும் நாட்டுக்கு முதலீடுகள் வரவில்லை. இதனால், அந்த காலத்தில் வளங்களை விற்பனை செய்வதே தீர்வாக இருந்தது.
மீதம் இருக்கும் தண்ணீர், மின்சாரம், வங்கி, ரயிவே திணைக்களம் ஆகியவற்றை விற்பனை செய்வது பற்றியும் அப்போது பேசப்பட்டது. அப்போது தற்பொழுது அச்சிடுவது போல் பணம் அச்சிடப்படவில்லை.
ரணில் தனது கொள்கையை அப்படியே முன்னெடுத்துச் செல்கிறார். எம்.சீ.சீ.உடன்படிக்கை மூலம் 450 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என ரணில் கூறினார்.
அதனை எதிர்த்து அதற்கு எதிராக நிலைப்பாடுகளை உருவாக்கி, ராஜபக்சவினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் ஊடாக ராஜபக்சவினர் தமக்கு தேவையானதை செய்து வருகின்றனர்.
அன்று வளங்கள் விற்பனை செய்வதற்கு எதிராக பேரணிகளை நடத்தியவர்கள், ரணில் தற்போது நாட்டின் வளங்களை விற்பனை செய்யும் போது கைகளை உயர்த்துகின்றனர்.
அன்று ரணிலின் தேசிய கொள்ளைகளை எதிர்த்தவர்கள், தற்போது அவரது பொருளாதார கொள்கைகளை தலையில் சுமந்து செல்கின்றனர் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.