லங்கையில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தின் நிலைமை கடந்த சில வாரங்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் எரிவாயு விநியோக இடங்களிலும் பாவனையாளர்கள் மணித்தியாலயக்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.

அந்நிய செலாவணி பற்றாக்குறையின் விளைவாக தற்போது நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கின்றது. இவ்வாறான சூழலிலும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு தொடராகப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. இதன் நிமித்தம் எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி முன்பை விடவும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தரவுகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறுவதற்கான காலத்திற்கு முன்னரை விடவும் எரிபொருள் இறக்குமதி தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருப்போரின் எண்ணிக்கை குறைந்ததாக இல்லை. இது கொள்வனவு செய்யப்படும் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் அளவில் அதிகரிப்பு ஏற்பட்டு இருப்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது.

பொருளாதார நெருக்கடி நிலவும் தற்போதைய சூழலில் கொள்வனவு செய்யப்படும் எரிபொருளின் அளவில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதற்கான காரணம் யாது? அதன் பின்புலம் என்ன? அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் எரிபொருளுக்கு என்ன நடக்கின்றது? இவ்வாறான கேள்விகளும் எழாமல் இல்லை.

இவ்வாறு எரிபொருளை வழமைக்கு மாறாக அதிகளவில் கொள்வனவு செய்தன் ஊடாக நாட்டில் எரிபொருளுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றனவா? இவ்விதமான முயற்சியின் ஊடாக மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றதா? என்றவாறான கேள்விகளும் மக்கள் மத்தியில் நிலவுகின்றன.

அதேநேரம் எரிபொருளை அதிகளவில் கொள்வனவு செய்து கொள்ளை இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அவை பதுக்கி வைக்கப்படுகின்றனவா? என்ற வினாவும் எழவே செய்கின்றது. இதற்கு நாட்டின் சில பிரதேசங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட எரிபொருளும் எரிவாயு சிலிண்டர்களும் காரணமாக அமைந்திருக்கின்றன. அவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருளும் எரிவாயு சிலிண்டர்களும் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரிந்ததே.

அதன் காரணத்தினால் தற்போதைய சூழலில் வழமைக்கு மாறாக எரிபொருள் கொள்வனவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. இதன் ஊடாகவே எரிபொருள் கொள்வனவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கான உண்மையான பின்புலத்தைக் கண்டறியக் கூடியதாக இருக்கும். அதன் மூலம் எரிபொருளுக்குரிய உண்மையான தேவையைக் கொண்டிருப்பவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

அதனால் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் எரிபொருள் கொள்வனவில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்புக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும் காணப்படவே செய்கின்றது. அதன் காரணத்தினால் இது தொடர்பில் தேடுதல் நடத்தப்படுவது அவசியம். அதன் ஊடாக எரிபொருளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் மோசடிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போது எரிபொருள் கொள்வனவின் ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடிகளையும் முறைகேடுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

அதன் பயனாக எரிபொருளை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ள நெருக்கடிகள் பலவற்றுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். இந்நடவடிக்கைகள் மக்களுக்கு பெரும் நிவாரணமாகவும் நம்பிக்கை அளிக்கும் சேவையாகவும் அமையும். அதனால் எரிபொருள் கொள்வனவில் தற்போது ஏற்பட்டிருக்கும் அதிகரிப்புக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதே மிகவும் அவசியமானது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது. ஆகவே நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து முன்னெடுக்கப்பட வேண்டிய அவசரமானதும் அவசியமானதுமான பணியாகவே இது விளங்குகின்றது.