குறைந்தது இன்னும் மூன்று வருடங்களுக்கு நாட்டில் மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டின் மின்சாரத் தேவைக்கு போதுமான அளவு உற்பத்தி செய்யவில்லை.
தற்போதைய தேவை ஒரு நாளைக்கு சுமார் 2,800 மெகாவாட் (MW) ஆகும். எனினும், அனல் மின், காற்றாலை மின், சோலார் மூலம் மின் விநியோகத்தை அதிகரிக்கும் வரை, மின்வெட்டு தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்நியச் செலாவணி நெருக்கடியால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெப்ரவரி 22ம் திகதி முதல் இலங்கையில் நாளாந்த மின்வெட்டு தொடர்வதாக ரஞ்சித் தெரிவித்தார்.
நிலைமையை எளிதாக்க அவசர முயற்சியாக அரசாங்கம் அதன் சோலார் பேனல் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், சூரிய சக்தியை சேமித்து வைப்பதற்கு போதுமான மின்கலம் வங்கிகளை இலங்கையில் நிறுவ வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தற்போது, ​​இலங்கை தனது பெரும்பாலான மின்சாரத்தை நீர் மின்சாரத்தில் இருந்து உற்பத்தி செய்கிறது, ஆனால் மழை இல்லாத நாட்களில் அது சாத்தியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, அனல் மின் நிலையங்களுக்கான டீசலை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மாதமொன்றுக்கு சுமார் 100 மில்லியன் டொலர்களை செலவிடுகிறது.
எனவே, நாடு உடனடியாக புதுப்பிக்கத்தக்கவைகளுக்கு மாற வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.