இலங்கையின் இன்றைய நெருக்கடியில், சிங்கள – பௌத்த பேரினவாதத்துக்கு முக்கிய பங்குண்டு. இந்நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ள நிலையிலும், அது, தீர்வை நோக்கிய திசைவழியில் இன்றுவரை ஏன் பயணிக்கவில்லை என்ற கேள்வியை, இலங்கையர்கள் கேட்டாக வேண்டும்.

மக்கள் உணவுக்கும் எரிபொருளுக்கும் அல்லாடுகையில், முல்லைத்தீவில் வட்டுவாகல் கடற்படைத் தளத்துக்காக மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி, சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அது, மக்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடி உச்சம் பெற்ற பின்னர், இடம்பெறும் முதலாவது நிகழ்வு இதுவல்ல. இது, இறுதி நிகழ்வும் அல்ல! இலங்கை அரசாங்கம் எதிர்கொள்கின்ற பரந்துபட்ட எதிர்ப்பை, பலமுனைகளில் திசைதிருப்ப அரசாங்கம் முனைகிறது.

அதேவேளை, சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கை அரசின் அடிப்படையாக அமைந்த, சிங்கள – பௌத்த பேரினவாதம், சர்வாதிகார அகங்காரமாகத் தன்னை உருமாற்றியுள்ள நிலையில், இது எதிர்பார்க்கக் கூடியதே.

மூன்று தசாப்தகால யுத்தமும் அதன் பொருளாதாரப் பரிமாணமும் போருக்குப் பிந்தைய காலப் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வந்த இராணுவச் செலவீனமும், இன்னமும் பொதுத்தளத்தில் பேசப்படாத விடயங்களாக இருக்கின்றன.

அன்றாட பொருட்களின் அபரிமிதமான விலை உயர்வாலும் தட்டுப்பாடாலும் மக்கள் அல்லலுறுகையில், எம்.பிகளின் எரியூட்டப்பட்ட வீடுகளை மீளக்கட்டுவதற்கு, அரசாங்கம் நிதி ஒதுக்குகிறது. இது இலங்கை அரசியல் பண்பாட்டின் ஒரு பரிமாணத்தை தெளிவுபடுத்துகிறது.

இன்னொருபுறம், நிறுவன மயமாக்கப்பட்டு உள்ள சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் கோரப்பிடியில் இருந்து, இலங்கை இன்னமும் விடுபடவில்லை. அதனிலும் மேலாக, இலங்கை வரலாற்றில் சந்தித்திராத மிகப்பாரிய நெருக்கடியால் அதை விடுவிக்க இயலவில்லை.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையானது, ‘ஜனநாயகம்’ என்ற தோற்றப் பொலிவோடு இயங்கினாலும், நடைமுறையில் அவ்வாறு அமைந்து இருக்கவில்லை. ஜனநாயகத்தின் போர்வையுடன், சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்ட வேளைகளில், மக்கள் தங்கள் வாக்குரிமை மூலம், சர்வாதிகாரச் சகதிக்குள் இலங்கை மூழ்காமல் பார்த்துக் கொண்டனர்.

2009இன் யுத்தவெற்றி, சர்வாதிகாரத்துக்கான வாய்ப்பை இறுதியாக வழங்கியது. ஆனால், 2015ஆம் ஆண்டு, தேர்தல் மூலம் இலங்கை மென்மையான சர்வாதிகாரத்தில் (soft authoritarianism) இருந்து, கடும் சர்வாதிகாரத்தை (hard authoritarianism) நோக்கிய நகர்வுக்கு, மக்கள் முட்டுக்கட்டை போட்டார்கள். இந்த நெருக்கடி, மீண்டுமொருமுறை சர்வாதிகாரத்துக்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளது. இதை நியாயப்படுத்தி, மக்கள் அங்கிகாரத்தைப் பெறுவதற்கு சிங்கள-பௌத்த பேரினவாதம் துணை போகிறது.

மூன்றாமுலக நாடுகளில், இலங்கை ஒரு வித்தியாசமான முன்மாதிரி. இனத்துவ மேலாண்மையானது, பன்மைத்துவத்தைத் தவிர்ப்பதற்கு சர்வாதிகாரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இலங்கையில் நீண்டகாலமாக இருந்து வரும் சிங்கள – பௌத்த மேலாதிக்கமும் சிறுபான்மையினரின் கீழ்படிதலும் இவ்விடயத்தை நிரூபிக்கின்றன.

சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் சித்தாந்தமானது, மதச்சார்பின்மையையும் பன்மைத்துவத்தையும் மேற்கத்தைய கட்டுமானங்களாகக் கருதுகிறது, இவை, இத்தீவில் பௌத்தத்தின் முதன்மையான இடத்தைப் பலவீனப்படுத்துகின்றன என்று வாதிடுகின்றன. இக்கருதுகோள்கள், காலப்போக்கில் மனித உரிமைகள், அரசியல் உரிமைகள், சுயாதீனமான நீதித்துறை, கருத்துச் சுதந்திரம் போன்ற அனைத்தையும் மேற்கத்தேயக் கட்டுமானங்களாக அடையாளம் காண்பதில் வெற்றிகண்டுள்ளன.

இவ்வாறு அடையாளம் காண்பதனூடு, இத்தீவில் பன்மைத்துவ வரலாற்றைக் கட்டியெழுப்ப விரும்பாத, சுதந்திரத்துக்குப் பிந்தைய உயரடுக்குகள், அரசியல் இலாபத்துக்காக இனம், மதம் போன்றவற்றில் பிளவுகளை ஏற்படுத்தின.
இது, உள்நாட்டுப் போருக்கும் அதைத் தொடர்ந்த அரசியல் பௌத்தமானது, பௌத்தத்தையும் ஜனநாயகத்தையும் சமரசம் செய்து நாட்டை, இராணுவ மயப்படுத்தப்பட்ட சர்வாதிகாரப் பாதையில் இட்டுச் சென்றது. அதிலிருந்து இன்றுவரை, இலங்கையால் மீள இயலவில்லை.

இது குறித்துப் பேராசிரியர் ஜெயதேவ உயன்கொடவின் கூற்று கவனிக்கத்தக்கது. “சிங்கள – பௌத்தம், ஒரு வன்முறையற்ற சமூக சித்தாந்தத்தின் பரிணாம வளர்ச்சியில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவில்லை. அதில், உள்ளார்ந்த சிங்கள – பௌத்த வரலாற்று பாரம்பரியம், கருத்தியல் என்பன இன அடிப்டையிலான அரசியல் வன்முறையை ஆதரிக்கிறது” என்கிறார்.

அரசியல் பௌத்தமானது, கட்டமைக்கப்பட்ட தொன்ம வரலாற்றுக் காலத்தின் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைக்க முயன்றதோடு, அதன் மூலம் பௌத்தத்தின் அமைதியான கட்டளைகளைச் சீர்குலைத்து, குழிபறித்தது. மேலும், தன் செயற்பாட்டில் ஜனநாயகத்தை கீழறுத்தது.

வரலாறு முழுவதும், எல்லா மதங்களும் அரசியல் நோக்கங்களுக்காகக் கையாளப்பட்டுள்ளன, பௌத்தமும் அவ்வாறே! இலங்கையில் உள்ள பௌத்த சாமானியர்களும் மதகுருமார்களும், அரசியல் பௌத்தத்தை பரப்புவதன் மூலம், பரஸ்பர நன்மைக்காக ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொண்டனர்.

பிக்குகள், தமது முக்கியத்துவம், செல்வாக்கு, ஆதரவை உறுதி செய்த அதேவேளையில், அரசியல்வாதிகளுக்கு சிங்கள – பௌத்த நற்சான்றிதழ்கள், பௌத்தத்தை வன்முறையின் கருவியாக பயன்படுத்துவதன் மூலம், இனவாத அரச இலட்சியத்துக்கு விசுவாசத்தை நிரூபிக்க ஒரு தளத்தை வழங்குகிறார்கள்.

பௌத்தத்தை ஒரு தத்துவமாகக் கருதுவோருக்கு இது ஆச்சரியமளிக்கலாம். ஆனால், போதிக்கப்படுவதற்கு மாறாக, பௌத்தர்களும் பௌத்தமும் எப்போதும் வன்முறையைத் தனது பகுதியாகக் கொண்டிருந்தது. ஏனென்றால், தெற்காசியாவில் ஓர் அமைதியான அரசு இருந்ததில்லை. காலப்போக்கில், பௌத்தம் ஒரு நியாயமான போர்க் கோட்பாட்டை வகுத்ததாகத் தோன்றுகிறது. இதன் விளைவு என்னவென்றால், அரசியலானது, பௌத்த மதத்தை மாற்றியமைத்தது; பௌத்தத்துடன் தொடர்புடைய அரசியல், மதத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

அரசியல் பௌத்தம், பௌத்த விழுமியங்களைப் புறக்கணித்தாலும் நடைமுறையில் பௌத்தமும் அரசியல் பௌத்தமும் இணைந்து செயற்படுகின்றன. இந்த வளர்ச்சிக்கு, மூன்று முக்கிய பிரச்சினைகள் பங்களித்துள்ளன.

முதலாவது, உள்நாட்டுப் போர். இது, ‘பௌத்த பாதுகாப்பு நாடு’ என்ற இலங்கையின் அந்தஸ்தை அச்சுறுத்தியது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு செய்யப்படும் யாவும் நியாயப்படுத்தப்பட்டன. போர், ஒரு வன்முறை சமூகத்தை உருவாக்கியது, பல பௌத்த துறவிகள் வன்முறையை நியாயப்படுத்தினர். சில துறவிகள், இராணுவத்தில் சேர, தங்கள் ஆடைகளைக் களைந்தனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர், பிரதானமாக தமிழர் பிரதேசங்களில், இராணுவ முகாம்களுக்கு அருகில், பௌத்த விகாரைகள் புதிதாக உருவாகி, மோதலுடன் தொடர்புடைய பகுதிகள், யாத்திரைத் தளங்களாக மாறியுள்ளன. இந்த யாத்திரைகள், முன்னாள் போர் வலயத்துக்கான விஜயங்களை உள்ளடக்கியது.

இராணுவத்தினருக்கான பாராட்டுகளை வலுப்படுத்துவதுடன், அது அரசியல் பௌத்தத்தை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், தொடர்ந்து நடைபெறும் இராணுவ மயமாக்கலுக்கும் தொடர்புபடுத்துகிறது.

பிக்குகள் மத்தியில் தண்டனையின்மை, அரசியல் பௌத்தத்திற்கு பங்களித்த இரண்டாவது முக்கிய காரணமாகும். ஒரு கோவிலின் நிலை, அதன் மதகுருமார்களின் நற்பெயரைப் பொருட்படுத்தாமல், இலங்கையில் ஒரு துறவியை வெளிப்படையாக அவமரியாதை செய்ய யாரும் துணிவதில்லை, ஏனெனில், சங்க (துறவற சமூகம்) பௌத்தத்தின் மும்மூர்த்திகளில் ஒன்றாகும். (மற்ற இரண்டும் புத்தர், தர்மம் ஜபுத்தரின் போதனைகள்).

இதன் மூலம், பிக்குகள் ‘கைது செய்யப்படலாம்’ என்ற அச்சமின்றி செயற்பட அனுமதித்துள்ளது. இலங்கையில் உள்ள பல பௌத்தர்கள், தனிப்பட்ட முறையில் பிக்குகளின் மோசமான நடத்தையை விமர்சிப்பர். ஆனால், பொதுவில் அவ்வாறு செய்வதைத் தவிர்க்கின்றனர். அரச அதிகாரிகள், துறவிகளைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்க்கிறார்கள். எப்போதாவது அவ்வாறு பேசுபவர்கள், துரோகிகள், தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

அரசியல் பௌத்தத்துடன் இணைந்து, மதம் செயற்பட வழிவகுத்த மூன்றாவது முக்கிய காரணி, பௌத்தத்தில் ஒரு படிநிலை இல்லாமையும் அதன் விளைவாக, சங்கத்தின் நடத்தையை ஒழுங்குபடுத்தும் இயலாமையும் ஆகும். இது இன்று இலங்கையில் பௌத்தம் எதிர்நோக்கும் முதன்மையான நெருக்கடியாகும்.

பாராளுமன்றத்திலும் பிக்குகள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். சிலர், பொது இடங்களில் கொச்சையானதும் தவறானதுமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். மேலும், பல துறவிகள் பொருள்முதல்வாதிகளாகவும் ஊழல்வாதிகளாகவும் காணப்படுகின்றார்கள்.
இவ்வாறாக, சங்கத்தினர் இலங்கையின் தனித்துவமான பௌத்த அடையாளத்தின் பாதுகாவலர்களாக ஒருபுறம் இருப்பதில், ஒரு முரண்பாட்டை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

இத்தகைய செயல்களை ஊக்குவிக்கும் தேசியவாதம், இந்தச் சீரழிவை மறைக்கிறது. ஆனால், அரசியல் பௌத்தத்துக்கும் ஒப்பீட்டளவில் சீரழிந்த மற்றும் ஊழல் நிறைந்த சங்கத்துக்கும் இடையே உள்ள தொடர்பு, அங்கிகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த அங்கீகாரம் அரசின் நடத்தையில் பிரதிபலிக்கிறது.

இலங்கை, இன்னும் ஏன் தீர்வின் திசைவழியில் பயணிக்கவில்லை என்ற கேள்வியை, பௌத்தம் எதிர்நோக்கும் நெருக்கடியில் இருந்தும் நோக்க வேண்டும். அரசாங்கத்தின் அண்மைய நடத்தைகள், இதையே கோடுகாட்டுகின்றன.