இன்று பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை பேருந்து சேவைகள் தடைப்படும் எனவும் அகில இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தனியார் துறை வாகனங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் வழங்கப்படுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு அமைச்சரவை இன்று தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக ஏனைய அலுவலகங்கள் மற்றும் நடவடிக்கைகளை வீட்டிலிருந்தே மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள், சுகாதார சேவைகள், அத்தியாவசிய உணவு விநியோகம் மற்றும் குறுகிய தூர போக்குவரத்து சேவைகள், ஏற்றுமதி மற்றும் சுற்றுலா போன்றவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய நிலைமை காரணமாக மாகாணங்களுக்கிடையிலான சுற்றுப்பயணங்களை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜூலை 10ஆம் திகதிக்குப் பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயுவை தொடர்ச்சியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்