திர்வரும் இரு மாதங்களில் 10 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதன்படி, 40,000 மெற்றிக் தொன் கொண்ட டீசல் கப்பல் ஜூலை 8 அல்லது 9 ஆம் திகதி இலங்கைக்கு வரும். மற்றுமொரு கப்பல் எதிர்வரும் ஜுன் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இலங்கைக்கு வரவுள்ளது.

கடந்த 30ஆம் திகதி இந்த எரிபொருள் கப்பலுக்காக 28 மில்லியன் டொலர்கள் முன்பணமாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 49 மில்லியன் டொலர்கள் பணம் வைப்பு செய்யப்பட உள்ளது.  இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய எண்ணெய் நிறுவனத்தின் ஊடாக 5 கப்பல்கள் வர உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜுலை 15-, 17 க்கு இடையில் லங்கா ஐ.ஓ.சி. (LIOC) நிறுவனத்தினால் மற்றொரு டீசல் கப்பல் வர உள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனத்தின் முதலாவது பெற்றோல் கப்பல் ஜுலை 22ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இலங்கைக்கு வரவுள்ளது. மலேசியாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் பெறுவதற்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலையை நிவர்த்திக்கும் வகையில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் என எரிசக்தி, மின் சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கிணங்க எதிர்வரும் 8 அல்லது 9ஆம் திகதியில் ஒரு டீசல் கப்பலும் அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 11 மற்றும் 14ஆம் திகதிகளில் மேலும் இரு எரிபொருள் கப்பல்களும் நாட்டை வந்தடையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் எரிசக்தி மின்சக்தி அமைச்சில் நடைபெற்றுள்ள செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு சொந்தமான டீசல் கப்பல் ஒன்று எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கப்பல் 15 ஆம் திகதிக்கும் 17ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு தினத்தில் நாட்டை வந்தடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதை வேளை, எதிர்வரும் 10ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்பதாகவோ பெற்றோல் கப்பல் ஒன்றை நாட்டிற்கு பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் மூன்று நிறுவனங்களோடு ஆவணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறுகிய கால மற்றும் நீண்ட காலத்தில் பலன் கிடைக்கும் அனைத்து வகையான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் உள்ள 400 உயர் அதிகாரிகளும் அவர்களின் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது, எரிபொருள் வரிசையில் இருப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காகவே டோக்கன் வழங்கப்பட்டதாகவும், புதிதாக எரிபொருள் வரிசைக்கு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கும் நோக்குடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்த அவர், அடுத்த எரிபொருள் கப்பல்கள் வந்தவுடன் ஏதேனும் ஒரு முறைமையில் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.எனவே, பொதுமக்கள் தயவு செய்து வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும், அவ்வாறு காத்திருப்பதாலேயே கறுப்பு சந்தையில் 1500 ரூபா வரையில் பலர் பெற்றோல் விற்பனையில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபைக்கு முறையாக எரிபொருள் வழங்கப்படுவதாகவும், எந்தவொரு காரணத்திற்காகவும் 3 மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக மின்வெட்டு அமுல்படுத்த வேண்டாமென தான் மின்சாரசபை தலைவருக்கு கோரியுள்ளதாக தெரிவித்த அவர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் மின்வெட்டை அமுல்படுத்தாமல் மக்களுக்கு மின் தடையை ஏற்படுத்தாமல் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்தும் சிந்தித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

-லோரன்ஸ் செல்வநாயகம்