எதிர்கால எரிபொருள் இறக்குமதிக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறை உள்ளது.நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் நுகரப்படும் எரிபொருளுக்கு நாட்டுக்கு 350 மில்லியன் டொலர் தேவைப்படுவதாகக் கூறிய அவர், தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் சுமார் 150 மில்லியன் டொலர் இருப்பதாகவும் கூறினார்.

இம்மாத எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் 200 மில்லியன் டொலரை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 நாட்களுக்கு தேவையான எரிபொருள் பெற்றோலிய கூட்டுத்தாபன வசம் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அமைச்சரவையால் பணம் வழங்கப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனவரி நடுப்பகுதிக்குள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் வானொலி நிலையம் ஒன்றில் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது