முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்டிகல ஆகியோர் நாளை வரை வெளிநாடு செல்லமாட்டோம் என தமது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவின் போது, பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளும் அந்த உறுதிமொழியை வழங்கினர்.
இதேவேளை, இந்த மனுவில் மற்றுமொரு பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன், சட்டத்தரணி இல்லாத காரணத்தினால் நாளை வரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு தொடர்பான பிரேரணையை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இணைந்திருங்கள்