ஆடைத் தொழில் துறையில் பணி புரியும் பெண்கள் பொருளாதார நெருக்கடியால் தமது முதலாளிகளால் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில் தங்கள் பொருளாதார பிழைப்புக்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது என தி மோர்னிங் (The Morning) தெரிவித்துள்ளது.

தி மோர்னிங் நடத்திய விசாரணையில், தற்போதைய சூழ்நிலையால் ஆடைத் தொழிலில் வேலை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் பல பெண் தொழிலாளர்கள், வருமானத்தை உறுதி செய்வதற்காக மாற்றுத் தொழிலைத் தேடி வருகின்றனர்.

“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் நாங்கள் வேலை இழக்க நேரிடும் என்று கேள்விப்பட்டோம். இந்த நேரத்தில் நாம் காணக்கூடிய சிறந்த தீர்வு பாலியல் தொழில்தான். எங்களின் மாதச் சம்பளம் சுமார் ரூ. 28,000 மற்றும் நாம் மேலதிக நேர கொடுப்பனவுடன் சம்பாதிக்கக்கூடிய அதிகபட்ச தொகை ரூ.35,000. ஆனால் பாலியல் தொழிலில் ஈடுபடுவதன் மூலம் நாம் ஒரு நாளைக்கு 15,000 ரூபாவை விட சம்பாதிக்கிறோம். எல்லோரும் என்னுடன் உடன்பட மாட்டார்கள், ஆனால் இதுதான் உண்மை” என்று அத்தகைய பெண் தொழிலாளி ஒருவர் தி மோர்னிங்கிடம் கூறினார்.

“நான் ஒரு கிராமப்புற கிராமத்தைச் சேர்ந்தவள், எனது குடும்பத்துக்கு ஒரே உணவளிப்பவள் நானே. நான் வீட்டிற்குச் செல்ல முடியாது; வேலை இல்லாமல் என்னால் வாழ முடியாது. பாலியல் தொழில் மூலம் நிறையப் பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எங்கள் தங்குமிடங்களுக்குப் பக்கத்தில் வசிக்கிறார்கள். முதலில், எனக்கு இது பிடிக்கவில்லை, ஆனால் இப்போது வேறு வழியில்லை”என்று மற்றொரு பெண் தொழிலாளி விளக்கினார்.

இதேவேளை பாலியல் தொழிலாளர்களுக்கான நாட்டின் முன்னணி ஆலோசனைக் குழுவான ஸ்டாண்ட் அப் மூவ்மென்ட் லங்கா (SUML) வின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷிலா தண்டெனிய, ஆடைத் தொழிலாளர்கள் இடையே பாதுகாப்பற்ற கர்ப்பம் மற்றும் விபசாரத்தில் அதிகரிப்பை அவர்கள் அனுபவித்து வருவதாகக் கூறினார்.

2021 மே மாதம் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை செய்ததை அடுத்து, கடந்த ஆண்டு விளைச்சல் 50% வரை குறைந்துள்ளதுடன் நாட்டின் விவசாய நிலத்தின் பெரும் பகுதி பயன்படுத்தாது இருப்பதால், விவசாயத்தில் தற்போது பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இலங்கையின் பின்தங்கிய கிராமங்களில் இருந்து ஜனவரி முதல்  பெண்களின் ‘பெரிய நகர்வு’ கொழும்புக்கு இடம்பெறுவதாக தண்டெனிய விபரித்தார். பெரும்பாலான பெண்கள் முன்பு ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர்களாவர்.

“இந்தப் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆடைத் தொழிலில் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். வேறு, திறமையான வேலையைக் கண்டுபிடிப்பதற்கான தொழில்முறைப் பயிற்சி அவர்களுக்கு இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சாரப் பற்றாக்குறையால் பாலியல் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடிக்கு முன், தன்னால் ஒரு நாளைக்கு ரூ 20,000 ரூபாவும், இப்போது வாரத்துக்கு 3,000 ரூபாவும் சம்பாதிக்க முடிவதாக பாலியல் தொழிலாளி ஒருவர் தெரிவித்தார்.

“நாங்கள் டக்சிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் மற்றும் எரிபொருளின் அதிகரிப்பு காரணமாக கட்டணங்கள் அதிகமாக உள்ளன. சில சமயங்களில் நாம் தவறான முடிவை எடுத்துவிட்டோம் என்று நினைக்கிறோம். நாங்கள் எங்கள் நிரந்தர வேலையை விட்டுவிட்டோம், இப்போது நாங்கள் தேர்ந்தெடுத்த தேர்வில் எங்களால் வாழ முடியாது” என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.