இந்தக் கோடையில் ஐரோப்பாவின் இரண்டாவது வெப்ப அலை, கண்டம் முழுவதும் உச்சபட்ச வெப்பநிலைகளை உண்டாக்கி வருகிறது. தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளின் வெப்பநிலை அதிகபட்சமாக 40-47°C (104-117°F) வரை அதிகரிக்கும். ஆயிரக் கணக்கானவர்கள் மரணமடைந்து வருகிறார்கள், நிலப்பரப்புகளின் பெரும் பகுதிகள் எரிந்து கொண்டிருக்கின்றன, அறுவடைப் பயிர்கள் நாசமாகி வருகின்றன, இவற்றைக் காலநிலை மாற்றம் அதிகரித்தளவில் ஒரு பொதுவான மற்றும் கடுமையான நிகழ்வுப்போக்காக ஆகி வருகிறது.

போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், குரோஷியா, கிரீஸ், துருக்கி எங்கிலும் காட்டுத் தீ பரவி வருகிறது. ஒரு வானிலை ஆய்வாளர் பிரான்சின் தென்மேற்கு பகுதியை ‘வெப்ப பிரளயம்’ என்று விவரித்தார், பிரெஞ்சு அரசாங்கம் ஏற்கனவே 25,000 பேரையும், துருக்கி 3,500 நபர்களையும், போர்ச்சுகல் 800 பேரையும் கட்டாயமாக வெளியேற்றி உள்ளன. தெற்கு ஸ்பெயினில் சுமார் 3,200 பேர் வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர், இதை ஸ்பெயினின் ABC பத்திரிகை ‘திடீர் நெருப்புப் பொழிவு’ என்று குறிப்பிட்டது.

நெருப்பால் ஏற்படும் அழிவுக்கு அப்பாற்பட்டு, இந்த வெப்ப அலையானது ஏற்கனவே வெப்பத்தால் ஏற்படும் மரணங்களின் ஓர் அலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது, பொதுவாக மாரடைப்பு அல்லது வலிப்பு ஆகியவற்றால் இது ஏற்பட்டு வருகிறது. போர்ச்சுகல் இதுவரை 650 க்கும் அதிகமான உயிரிழப்புகளை அறிவித்துள்ளது, ஜூலை 7 மற்றும் 13 க்கு இடையில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒருவர் இறந்துள்ளார். ஸ்பெயின் 510 க்கும் அதிகமான இறப்புகளை அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கைகள் இன்னும் உயரும். 2003 ஐரோப்பிய வெப்ப அலையின் போது, அதிகபட்ச மட்டங்களை எட்டிய வெப்பநிலைகள் நீண்ட காலத்திற்கு நீடித்தன, ஐக்கிய நாடுகள் சபை புள்ளிவிபரங்களின்படி, அப்போது கண்டம் முழுவதும் 72,000 பேர் இறந்ததாக ஒரு மதிப்பீடு உள்ளது, பிரான்சில் சுமார் 15,000 பேரும் ஸ்பெயினில் 13,000 பேரும் அதில் உள்ளடங்குவர்.

ஆபத்தை இன்னும் அதிகரிக்கும் வகையில், பெரும்பாலான ஐரோப்பிய வீடுகளில் குளிரூட்டி (AC) வசதிகள் இல்லை. AC உற்பத்தி நிறுவனமான Inaba Denko இன் ஓர் ஆய்வின்படி, பிரிட்டன் மற்றும் ஜேர்மனியில் 3 சதவீத வீடுகளிலும், பிரான்சில் 5 சதவீதம், இத்தாலியில் 7 சதவீதம், போர்ச்சுகல்லில் 8 சதவீதம் மற்றும் ஸ்பெயினில் 30 சதவீதம் வீடுகளில் மட்டுமே குளிரூட்டி வசதி உள்ளது. பிரிட்டனில், 65 சதவீத அலுவலக இடங்களும், 30 சதவீதச் சில்லறை விற்பனை அங்காடிகளும் மட்டுமே AC வசதியைக் கொண்டுள்ளன.

இந்த வெப்ப அலைக்குப் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விடையிறுப்பு, ஐரோப்பாவின் அனைத்து அரசாங்கங்களின் தன்மையை எடுத்துக் காட்டும் வகையில், உயிரிழப்புகளுக்குப் பொறுப்பற்ற மற்றும் இரக்கமற்ற அலட்சியத்தைக் காட்டுகிறது. புவி வெப்பமடைதல் ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலி வாங்குகிறது, பேரழிவுகரமான வறட்சியோடு உணவு வினியோகங்களை அச்சுறுத்துகிறது, கடுமையான வெள்ளப் பெருக்கை உண்டாக்குகின்ற நிலையில், துணைப் பிரதம மந்திரி டொம்னிக் ராப் எரிச்சலூட்டும் விதத்தில், “வெப்பத்தை மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்’ “நெகிழ்ச்சியோடு இருங்கள்’ என்று பிரிட்டிஷ் மக்களுக்குக் கூறினார்.

“சடலங்கள் ஆயிரக் கணக்கில் மலைப் போல் குவியட்டும்,” என்று பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் கோவிட்-19 பெருந்தொற்றைக் குறித்துக் கூறியதற்காக உலகம் முழுவதும் இழிபெயர் எடுத்துள்ளார். பிரிட்டன் முன்பில்லாத வகையில் அதன் முதல் ‘தீவிர வெப்ப சிவப்பு எச்சரிக்கையை’ அறிவித்த பின்னர், திங்கட்கிழமை ஓர் அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூட அவர் நினைக்கவில்லை. அதே நாளில், வெப்பப் பாதிப்புகள் காரணமாக இரயில் சேவைகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டன, அறுவைச் சிகிச்சை அறைகள் செயல்பட முடியாத அளவுக்கு வெப்பமாக இருந்ததால் மருத்துவமனை அறுவைச் சிகிச்சைகள் இரத்துச் செய்யப்பட்டன.

கோவிட்-19 மற்றும் வெப்பத்தால் வீட்டிலேயே தங்கி இருக்க விரும்புவதற்காகத் தொழிலாளர்களைக் கண்டித்த Daily Telegraph’s துணைப் பதிப்பாசிரியர் கமிலா டோமினி, “வேலை செய்யத் தயங்கும் பிரிட்டிஷ்காரர்கள் வீட்டிலேயே தங்கி இருக்க புதிய காரணத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்,” என்று சனிக்கிழமை குறைக் கூறினார்.

இந்தத் தற்போதைய வெப்ப அலை மற்றும் வறட்சியை உருவாக்கி உள்ள காலநிலை மாற்றம் மீதான உத்தியோகபூர்வ அலட்சியம் மற்றும் செயலின்மைக்குக் குறிப்பாக இது ஒரு கூர்மையான எடுத்துக்காட்டாக உள்ளது.

பல தசாப்தங்களாக உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்கள் புவி வெப்பமடைதல் மீது எந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மனிதகுலம் இப்போது ஒரு பேரழிவை எதிர் கொண்டுள்ளது. கடந்த நவம்பரில், காலநிலை நடவடிக்கைக்கான பிரபல கண்காணிப்பு அமைப்பு, நாடுகளின் குறுகிய கால மாசு வெளியேற்ற இலக்குகளின் அடிப்படையில் உலகின் வெப்பநிலை இந்த நூற்றாண்டின் முடிவில் 2.4° செல்சியஸ் அதிகரிக்கும் என்று முன்கணித்தது, இது 2015 பாரிஸ் உடன்படிக்கை ஏற்கனவே நிர்ணயித்த 1.5° செல்சியஸ் என்ற அபாயகரமான வரம்பை விட அதிகமாக இருந்தது.

ஐரோப்பாவில் கடுமையான வெப்பம் விரைவிலேயே மிகவும் பொதுவான ஒன்றாக ஆகிவிடும். நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் இந்த மாதம் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கை, இந்தக் கண்டம் ‘குறிப்பாக வெப்ப உச்சநிலையில் வலுவான அதிகரிப்பை’ கண்டுள்ளதாகக் கண்டறிந்தது, மேலும் ஐரோப்பிய வெப்ப அலைகள் ‘உலகளாவிய சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடும் போது எதிர்காலத்தில் சீரற்ற முறையில் அதிகரிக்கும் என்று கணித்தது.’

கடந்த ஆண்டு காட்டுத் தீ பருவ காலத்தில், Independent பத்திரிகைக்கு இஸ்தான்புல் பொகாஜிசி (Bogazici) பல்கலைக்கழகத்தின் Levent Kurmaz கூறுகையில், ‘இந்த நூற்றாண்டின் இறுதியில் மத்தியத் தரைக் கடலைச் சுற்றிலும் ஒரு பாலைவன காலநிலை ஏற்படப் போகிறது,’ என்றார். அதற்குள், ‘தெற்கு துருக்கி, தெற்கு கிரீஸ் மற்றும் தெற்கு இத்தாலியின் தட்பவெப்ப நிலை இப்போதைய கெய்ரோ மற்றும் தெற்கு ஈராக்கிய நகரமான பாஸ்ராவின் காலநிலையைப் போலவே ஆகிவிடும்’ என்று Independent குறிப்பிட்டது.

இன்று உணவுப் பொருட்களின் விலைகள் கூர்மையாக அதிகரித்து வருவதோடு கூட, பயிர் அறுவடைகளும் கடுமையான ஆபத்தில் உள்ளன. கிட்டத்தட்ட பாதி ஐரோப்பா வறட்சி எச்சரிக்கை நிலையிலும் சுமார் பத்தில் ஒரு பங்கு எச்சரிக்கை நிலையிலும் உள்ளது. ஐரோப்பிய வறட்சி கண்காணிப்பகம் எச்சரிக்கையில், “தண்ணீரும் வெப்ப அழுத்தமும் தானியங்கள் மற்றும் பிற பயிர்கள் மீதான முந்தைய எதிர்மறைக் கண்ணோட்டங்களில் இருந்து பயிர் சாகுபடிகளின் அளவை இன்னும் குறைத்து வருகின்றன. பிரான்ஸ், ருமேனியா, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் இத்தாலி ஆகியவை இந்தக் குறைந்து போன பயிர் விளைச்சலைச் சமாளிக்க வேண்டியிருக்கும். ஜேர்மனி, போலாந்து, ஹங்கேரி, ஸ்லோவேனியா மற்றும் குரோஷியாவும் பாதிக்கப்பட்டுள்ளன,” என்று குறிப்பிட்டது.

வடக்கு இத்தாலி 70 ஆண்டுகளில் இல்லாதளவில் மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகிறது, Po மற்றும் Serchio போன்ற பெரிய ஆறுகள் கிட்டத்தட்ட முற்றிலும் வறண்டு விட்டன. நாட்டின் மிகப் பெரிய விவசாய சங்கத்தின் கூற்றுப்படி, அதன் விவசாய உற்பத்தியில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளன.

இந்த மார்ச்சில் Earth’s Future இல் வெளியான மற்றொரு ஆய்வறிக்கை, 2018-2020 ஐரோப்பிய வறட்சி 250 ஆண்டுகளில் மிக மோசமானதாக இருந்ததைக் கண்டறிந்தது. சுமாரான மாசுபாட்டுக்கே ஏறக்குறைய எட்டாண்டு காலம் வறட்சிகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம், அதுவே மிகவும் மோசமாக இருந்தால் 25 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

புவி வெப்பமடைதல் காரணமாகக் கடல் மட்டம் உயர்ந்து வருவது, மிகப் பெரும் வெள்ளப் பெருக்கு குறித்தும் மற்றும் பயிர்களும் கடற்பகுதிகளும் நாசமாவதைக் குறித்தும் அச்சுறுத்துகிறது. வெள்ளப் பெருக்கில் இருந்து பாதுகாக்க உள்கட்டமைப்பில் மகத்தான வேலைகள் செய்யாவிட்டால், வெள்ளப் பெருக்கின் சேதங்கள் மிகப் பெரியதாக இருக்கும். இந்தச் செலவினம் இந்த நூற்றாண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாக அல்லது அரை-ட்ரில்லியன் டாலர்களுக்கு அதிகமாக உயரக்கூடும் என்று 2014 இல் ஐரோப்பிய ஒன்றியம் (EU) மதிப்பிட்டது; 2018 இல், Carbon Brief கூட்டமைப்பு 961 பில்லியன் யூரோக்கள் செலவாகும் என்று மதிப்பிட்டது.

புவி வெப்பமடைதல் என்பது ஓர் அதிமுக்கிய அச்சுறுத்தலாகும், பேரழிவைத் தடுக்க மனிதகுலத்தின் வளங்களைத் திட்டமிட்டு, உலகளவில் ஒருங்கிணைந்த ரீதியில் அணித்திரட்டுவது அவசியமாகும். கார்பன் மாசுபாட்டைக் குறைக்கவும், பொது உள்கட்டமைப்பை விரிவாக்கவும், பில்லியன் கணக்கான வீடுகளை மறுசீரமைப்பதற்கும், உலகத் தொழில்துறையை மாற்றியமைப்பதற்கும் அளப்பரிய தொழில்நுட்ப, விஞ்ஞான மற்றும் தொழில்துறை ஆதார வளங்கள் அர்ப்பணிக்கப்பட வேண்டும். இது மட்டுமே உயிர்களையும், உணவுப் பொருட்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பையும் பாதுகாக்கும் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கும்.

முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பு முறையின் இந்தத் திவாலான கட்டமைப்பிற்குள்ளும், இலண்டன் நகர நிதியத் தன்னலக்குழுவின் ஒளிவுமறைவற்ற கருவியாக விளங்கும் ஜோன்சன் அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளையின் கீழும் இது போன்ற ஒரு விடையிறுப்பைத் திட்டமிடுவது சாத்தியமில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக, உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்கள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை அவற்றின் இராணுவத்தைக் கட்டி எழுப்புவதற்கும் ஒன்றின் மீது ஒன்று போர் தொடுப்பதற்கும் வாரியிறைத்து வருகின்றன. இந்தாண்டு உக்ரேனில் அமெரிக்க-நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பகிரங்கமான போர் வெடிப்பதற்கு முன்னர், கடந்த தசாப்தத்தில் ஐரோப்பா அதன் நிகர இராணுவச் செலவுகளைக் கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக, நேட்டோ அதிகாரங்கள் ரஷ்யாவில் இருந்து இயற்கை எரிவாயு இறக்குமதியை நிறுத்தியதால், அவை இன்னமும் அதிகமாக மாசுபடுத்தும் எரிசக்தி வளங்களுக்குத் திரும்பி வருகின்றன: ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து அனைத்தும் நிலக்கரி மின் நிலையங்களை மீண்டும் செயல்படுத்த தொடங்கி உள்ளன. பசுமைக் கட்சியின் ஜேர்மன் வெளியுறவுத் துறை மந்திரி அன்னலெனா பேர்பாக் அதிகாரத்தின் கீழ், ஜேர்மனியின் காலநிலை மாற்றத்திற்கான தூதர் ஜெனிபர் மோர்கன் பேர்லினில் நடந்த சமீபத்திய காலநிலை மாற்ற மாநாட்டில் கூறுகையில், ‘இந்த ரஷ்ய ஆக்கிரமிப்புப் போர் நாங்கள் விரும்பாத குறுகிய கால முடிவுகளை எடுக்க எங்களை நிர்பந்தித்து வருகிறது,’ என்றார்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசாங்கங்களின் செயலற்ற கொலைபாதக அலட்சியத்தில் இருந்து படிப்பினைகளைப் பெற வேண்டும். போருக்கு எதிரான போராட்டம் மற்றும் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 1.9 மில்லியன் உயிர்களைக் கொன்றுள்ள கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தைப் போலவே, புவி வெப்பமடைதலுக்கு எதிரான போராட்டமும் ஓர் அரசியல் மற்றும் வர்க்கப் பிரச்சினையாகும். உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நலன்கள் ஆளும் உயரடுக்கின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானவை. சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்திலும் மற்றும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு திட்டமிடப்பட்ட பொருளாதாரத்திற்கான போராட்டத்திலும், தொழிலாள வர்க்கத்தைப் புரட்சிகரமாக அணிதிரட்டுவது, காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அவசியமாகிறது.