உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமியர் செலென்ஸ்கி, உக்ரேனின் இரகசிய சேவையின் (SBU) தலைவர் இவான் பக்கானோவ் (Ivan Bakanov) மற்றும் அரசு வழக்குத்தொடுனர் இரினா வெனிடிக்ரோவா (Irina Venediktova) ஆகியோரை இடைநீக்கம் செய்தார். இரு நிறுவனங்களின் அதிகாரிகளிடையே ரஷ்யாவுடனான பாரிய “ஒத்துழைப்பு” இருப்பதாக குற்றம்சாட்டினார். ‘தேசத்துரோகம்’ என்று சந்தேகிக்கப்படும் வழக்குகளில் இரு நிறுவனங்களின் 651 அதிகாரிகளிடையே குற்றவியல் விசாரணைகள் நடந்து வருவதாகவும் செலென்ஸ்கி வெளிப்படுத்தினார்.
SBU இன் தலைவரான இவான் பக்கானோவ், செலென்ஸ்கியின் நெருங்கிய குழந்தைக்கால பருவ நண்பரும், அவரது முன்னாள் ஆலோசகரும் மற்றும் ஆளும் Servant of the People Party இன் முன்னாள் தலைவருமாவார். ‘உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக, மனிதஉயிர் இழப்பு மற்றும் பிற கடுமையான விளைவுகளுக்கு வழிவகுத்தது அல்லது அத்தகைய விளைவுகளின் அச்சுறுத்தலை உருவாக்கியதற்காக’ அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
போரின் தொடக்கத்தில் இருந்து, செலென்ஸ்கிக்கும் பக்கானோவிற்கும் இடையிலான பதட்டங்கள் அதிகமாக இருந்தன. போர்க்களத்தில் ஹெர்சோன் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது உட்பட உக்ரேனிய இராணுவத்தின் சில முக்கிய தோல்விகளுக்கு செலென்ஸ்கி பக்கானோவ் மற்றும் SBU ஐ குற்றம் சாட்டினார். SBU அதிகாரிகள் பலர் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்றது தொடர்பான பல உயர்மட்ட வழக்குகள் உள்ளன. அத்துடன் SBU உயர் அதிகாரிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட உயர் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்களும் உள்ளன
பக்கானோவின் முந்தைய உதவியாளரான39 வயதான SBU அதிகாரியான வாஸிலி மாலியுக், இப்போது SBU இன் தற்காலிக தலைவராக இருப்பார். கிரிமியாவிற்கான SBU இன் பிரிவின் தலைவரும், பக்கானோவின் உதவியாளருமான ஓலேக் குலினிச் இனை ஜூலை 16 அன்று கைது செய்ததில் மாலியுக் ஈடுபட்டார். அவர் இப்போது தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளானார். பக்கானோவின் ஈடுபாடு இல்லாமல் இந்தக் கைது நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இது ஜனாதிபதியின் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது Politico இன் ஜூன் அறிக்கையின்படி, சில காலம் SBU இன் தினசரி நடவடிக்கைகளை ஜனாதிபதியின் அலுவலகம் வழிநடத்தியது.
கடந்த ஆண்டு பண்டோரா ஆவணங்களில் வெனடிக்ரோவா மற்றும் பக்கானோவ் இருவருமே பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர். மேலும் அனைத்து உக்ரேனிய அதிகாரிகளைப் போலவே எண்ணற்ற ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரகசிய சேவையான SBU மற்றும் அரசு வழக்குத்தொடுனர் அலுவலகம் ஆகிய இரண்டும் உக்ரேனின் போர் முயற்சிக்கும் அதன் உள்நாட்டு அடக்குமுறை பிரச்சாரத்திற்கும் மையமாக உள்ளன.
போருக்கு முந்தைய வெறும் 40 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், SBU 27,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இது கிட்டத்தட்ட FBI ஐ போன்றும், மேலும் ஐரோப்பாவில் உள்ள மற்ற உளவுச்சேவைகளை விடவும் அதிகமானதாகும். SBU உள்நாட்டு அடக்குமுறையின் வன்முறைப் பிரச்சாரத்திற்கு பொறுப்பாக உள்ளது. இதில் உக்ரேனின் பெரிய எதிர்க் கட்சியை தடை செய்வது மட்டுமல்லாமல், எதிர்க் கட்சி அரசியல்வாதிகள் திரளாக கைதுசெய்யப்படுவது, உக்ரேனின் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்களைக் கொல்வது மற்றும் போரை எதிர்க்கும் எவரையும் வன்முறையுடன் துன்புறுத்தல் ஆகியவை அடங்கும்.
ரஷ்ய ஊடக அறிக்கைகளின்படி, SBU தான் இப்போது நேட்டோ சக்திகளால் போருக்காக உக்ரேனுக்குள் செலுத்தப்படும் பில்லியன் டாலர் ஆயுதங்கள் கிடைக்கும் முக்கிய புள்ளியாகவும் உள்ளது. உக்ரேனின் எல்லையைத் தாண்டியவுடன் இந்த ஆயுதங்களில் பல ‘காணாமல் போகின்றன’, சில ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களின் கைகளில் போய்முடிவடைகின்றன என்று ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் அதிக அளவில் கவலைப்படுவதாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை கடந்த வாரம் தெரிவித்தது.
ரஷ்யாவுடன் ‘ஒத்துழைப்பாளர்கள்’ என்று சந்தேகிக்கப்படுபவர்கள் மீதான ஒடுக்குமுறையில் அரச வழக்குத் தொடுனர் முக்கியமாக ஈடுபட்டுள்ளது. போருக்கு முன், வெனெடிக்ரோவாவின் அலுவலகம், தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில், மேற்கத்திய ஆதரவுடன் 2014 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் பதவிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ மீது வழக்குத் தொடர்ந்தது. மேற்கத்திய அதிகாரிகள் மற்றும் தீவிர வலதுசாரிகள் ஆகிய இருவருடனும் நெருங்கிய உறவுகளைக் கொண்ட பொரோஷென்கோ, ரஷ்யாவுடன் ‘மென்மையானவர்’ என்று செலென்ஸ்கியை மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். பொரோஷென்கோ போர் தொடங்குவதற்கு சற்று முன்பு செலென்ஸ்கியை பிரதியீடு செய்யத் தயாராகி வருவதாக வதந்தி பரவியது. வெனெடிக்ரோவாவை பிரதியீடு செய்த ஒலெக்ஸி சிமோனென்கோ பயிற்சி பெற்ற SBU அதிகாரியாவார்.
இந்த களையெடுப்பு செலென்ஸ்கி அரசாங்கத்தினுள்ளான கடுமையான நெருக்கடி மற்றும் ஆளும் வர்க்கம் மற்றும் அரசு அமைப்பிகளுக்குள்ளான தீவிர மோதல்களை அம்பலப்படுத்துகிறது. இவை உக்ரேனில் ஏகாதிபத்திய பினாமிப் போருக்கு அரை வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள்ளும் மற்றும் உக்ரேனிய இராணுவத்தின் கடுமையான பின்னடைவுகள் மற்றும் இழப்புகளுக்கு மத்தியில் வருகிறது. இந்த தேசத் துரோகக் குற்றச்சாட்டுகள், அரசு அமைப்பினுள் உள்ள போருக்கான ஆதரவு தொடர்பாக CIA ஆல் சந்தேகிக்கப்படும் தனிநபர்களை களையெடுப்பதற்கான ஒரு வழிமுறையாகும். மேலும், இப்போது விசாரணையில் உள்ள ஏராளமான அரசு அதிகாரிகளின் அளவானது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களால் முற்றாக மறைக்கப்படும் அமெரிக்க-நேட்டோ தூண்டிய போருக்கு உள்ள பரந்த பொதுமக்கள் எதிர்ப்பினையும் மற்றும் ரஷ்யாவிற்கு உள்ள அனுதாபத்தினையும் காட்டியுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் ஜூன் மாதம், ‘உக்ரேனில் நடக்கும் போர் நவீன வரலாற்றின் இரத்தக்களரிகளில் ஒன்றானதாக உள்ளது’ என்று குறிப்பிட்டது. ஏனெனில் இது ‘வழக்கமான போரை விட ஒரு நாளைக்கு அதிகமான படையினரைக் கொன்றது.’ ஆயிரக்கணக்கான படையினரை இழந்த ரஷ்யா, ஏப்ரலில் 23,000 உக்ரேனிய படையினரைக் கொன்றதாகக் கூறியது. இந்த புள்ளிவிவரங்களை கியேவ் மறுத்தாலும், உக்ரேனிய அதிகாரிகள் ஜூன் மாதம் கிழக்கு உக்ரேனில் ஒவ்வொரு நாளும் 500 ஆண்கள் வரை போரில் இறக்கின்றனர் என்பதை ஒப்புக்கொண்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
வாஷிங்டன் குறிப்பாக பக்கானோவை பதவி நீக்கம் செய்வதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது. மேலும் இரு நிறுவனங்களின் மறுசீரமைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பணிநீக்கங்கள் பற்றிய தனது அறிக்கையில், நியூ யோர்க் டைம்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டது, “இந்த நடவடிக்கைகள் அதிக அனுபவம் வாய்ந்த தலைவர்களை முக்கிய பாதுகாப்பு பதவிகளில் அமர்த்துவதற்கு திரு. செலென்ஸ்கியின் முயற்சிகளை பிரதிபலிக்கின்றன என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் உக்ரேனிய கூட்டாளிகளுக்கு பெருமளவிலான தகவல்களை அளித்து வருகின்றன”.
ஜேர்மன் Der Spiegel இதழானது பக்கானோவின் பதவி நீக்கம் ‘நீண்டகால தாமதமான முடிவு’ என்று வெளிப்படையாக வரவேற்றது.
நேட்டோ சக்திகள் நீண்டகாலமாக உக்ரேனை தம்முள் ஒருங்கிணைப்பதின் ஒரு பாகமாக SBU ஒரு பெரிய சீர்திருத்தத்திற்கு உள்ளாக வேண்டும் என்று கோரி வருகின்றன. மேலும் 2019 இல் செலென்ஸ்கி மூலம் பக்கானோவின் நியமனம் நேட்டோ மற்றும் செலென்ஸ்கியின் உள்நாட்டு எதிர்ப்பாளர்களிடமிருந்து பல விமர்சனங்களைத் தூண்டியது.
மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்கள், SBU இன் ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சோவியத் கால KGB இனால் பயிற்சி பெற்றுள்ளனர் என வழமையாக தெரிவிக்கின்றனர். இந்தப் பின்னணிக்கும், போரின் தொடக்கத்திலிருந்து ரஷ்யப் பக்கம் ஏற்பட்ட பல விட்டோடல்களுக்கும் இடையே ஒரு தொடர்பு ஏற்படுத்தப்படுகின்றது. எவ்வாறாயினும், முதலாளித்துவ பத்திரிகைகளால் பணிவுடன் புறக்கணிக்கப்படுவது என்னவென்றால், SBU தீவிர வலதுசாரி பிரிவினரால் ஊடுருவப்பட்டு மற்றும் நாஜி ஒத்துழைப்பாளரும் உக்ரேனிய பாசிசத் தலைவருமான ஸ்டீபன் பண்டேராவின் அபிமானிகளுடனான அதன் அடிபணிதலுக்கும் இழிபுகழ் பெற்றது.
உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு மற்றும் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (UPA) ஆகியவற்றிலிருந்து இரண்டாம் உலகப் போரின் காலகட்ட பாசிசவாதிகளுக்கு மறுவாழ்வு கொடுத்து மற்றும் ஊக்குவிப்பதற்கான உக்ரேனிய அரசிற்கான ஏகாதிபத்திய ஆதரவு முயற்சிகளில், ஒருவேளை மற்ற எந்த அரசாங்க நிறுவனத்தையும் விட, SBU முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த ஒரு பிரச்சாரம் இப்போது முன்னணி மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களின் பக்கங்களில் பரவியுள்ளது.
சோவியத் கால உக்ரேனிய KGB இன் வாரிசாக, SBU முக்கிய வரலாற்று ஆவணங்களை கட்டுப்படுத்துவதுடன் மற்றும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வரலாற்றை எழுதுவதில் ஆதிக்கத்தை ஏற்படுத்துகிறது. 2004-2005 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆதரவுடன் ‘ஆரஞ்சுப் புரட்சி’க்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த விக்டர் யுஷ்செங்கோ, வோலோடிமியர் வியாட்ரோவிச்சை SBU காப்பகத்தின் இயக்குநராக நியமித்தார். அவர் OUN-B முன் அமைப்பான விடுதலை இயக்கத்தின் ஆய்வு மையத்தின் தலைவராக ஒரே நேரத்தில் பணிபுரிந்தார். இவர் OUN-B இன் நாஜி ஒத்துழைப்பாளர்களை விடுதலை வீரர்கள் மற்றும் தியாகிகள் என்று பகிரங்கமாக புகழ்ந்தார்.
மேற்கத்திய ஆதரவுடனான 2014 ஆட்சிக் கவிழ்ப்பில் முக்கியப் பங்கு வகித்த SBU இன் முன்னாள் தலைவரான வலன்ரைன் நாலிவைஷென்கோ, யூத-விரோத படுகொலைகள் மற்றும் அதன் யூத-விரோதத்தில் OUN இன் பங்கை வெளிப்படையாக மறுத்து, SBU இன் வேலை ‘1930-1950 களில் உக்ரேனிய தேசியவாதிகள் மற்றும் UPA அமைப்புகளின் மரபுகளை உருவாக்குவதாக இருக்கும்’ என 2015இல் கூறினார்.
2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், செலென்ஸ்கி தனது நீண்டகால கூட்டாளியான பக்கானோவை நியமித்தபோது, உக்ரேனிய தீவிர வலதுசாரிகளால் செலென்ஸ்கி கடுமையான அழுத்தத்தையும் பாரிய எதிர்ப்புகளையும் எதிர்கொண்ட நிலைமைகளின் கீழ், இந்த தீவிர வலதுசாரிக் கூறுகளை கட்டுக்குள் வைத்திருப்பது ஓரளவு தோல்வியுற்ற முயற்சியாக இருக்கலாம். மேற்கத்திய ஆதரவுடனான SBU இன் களையெடுப்பு, ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஏகாதிபத்தியத்தின் முக்கிய அதிர்ச்சித் துருப்புக்களாக இப்போது செயல்பட்டு வரும் இந்த நவ-பாசிச சக்திகளை மேலும் தைரியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இணைந்திருங்கள்