ஆஸ்திரேலியாவில் நாளை (16) ஆரம்பமாகும் ரி – 20 உலகக் கிண்ணப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி நமீபியாவை எதிர்கொள்ளவுள்ளது.

கீலோங்கில் நடைபெறும் இந்தப் போட்டி சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கு இலங்கை அணிக்கு தீர்க்கமானதாக அமையும். எனினும் ஆசிய கிண்ணத்தை வென்று கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது பயிற்சிப் போட்டியில் சிம்பாப்வேயையும் தோற்கடித்த தன்னம்பிக்கையுடனேயே இலங்கை அணி இந்தப் போட்டியில் களமிறங்குகிறது.

எனினும் அதிரடி துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட நமீபிய அணி கடந்த டி20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய நிலையில் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது.

இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டி இலங்கை நேரப்படி நாளை காலை 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் 1.30க்கும் நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

டி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆரம்ப சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆடவுள்ளன. இதில் இலங்கை அணி ஏ குழுவில் இடம்பெற்றிருப்பதோடு அந்தப் குழுவில் நமீபியாவுடன் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நெதர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். கடந்த ஆண்டு டி20 தரவரிசையில் முதல் எட்டு இடங்களை பிடித்திருந்த அணிகள் சுப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

அவுஸ்திரேலியாவில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதோடு அது இம்முறை உலகக் கிண்ணத்திலும் பாதிப்புச் செலுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணி ஆடவிருந்த அயர்லாந்துடனான இரண்டாவது பயிற்சிப் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.