இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று (05/01/2023) பூனேயில் நடைபெற்ற இரண்டாம் 20-20 போட்டியில் இலங்கை அணி அதிரடி துடுப்பாட்டம், ஆக்ரோஷமா பந்துவீச்சினால் 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளடங்கிய தொடர் சமநிலையில் நிறைவடைந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 80 ஓட்டங்கள் வரை பெற்றிருந்தாலும் முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. அதன் காரணமாக இலங்கை அணி தடுமாறியது. பின்னர் தஸூன் ஷானக்க தனியாக நின்று அதிரடியாக துடுப்பாடி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்திக்கொடுத்தார்.

இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது. இதில் தஸூன் ஷானக்க ஆட்டமிழக்காமல் 56(22) ஓட்டங்களையும், குஷால் மென்டிஸ் 52(31) ஓட்டங்களையும், சரித் அசலங்க 37(19) ஓட்டங்களையும், பத்தும் நிசங்க 33(35) ஓட்டங்களையும் பெற்றனர்.

தஸூன் ஷானக்க 20 பந்துகளில் அரைச்சதத்தை பூர்த்தி செய்து இலங்கை அணி சார்பாக பெறப்பட்ட வேகமான அரைச்சதம் என்ற மஹேல ஜெயவர்தனவின் சாதனையினை முறியடித்தார். அத்துடன் இலங்கை அணி சார்பாக கூடுதலான சர்வதேச 20-20 போட்டிகள் விளையாடிய வீரர் என்ற மைற்கல்லையும் தொட்டார். லசித் மாலிங்க 84 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்தியா அணியின் பந்துவீச்சில் உம்ரன் மாலிக் 3 விக்கெட்களை கைப்பற்றினார். ஆனாலும் 48 ஓட்டங்களை வழங்கினார். சுழற்பந்துவீச்சாளர் அக்ஷர் பட்டேல் இறுக்கமாக பந்துவீசி 24 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி கஸூன் ரஜித வீசிய இரண்டாம் ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாற ஆரம்பித்தது. தொடர்ச்சியாக இறுக்கமாக பந்துவீசி முதல் 5 விக்கெட்களை 57 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்தனர். இந்தியா அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் நிதானம் காத்து அதிரடியாக அடித்தாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார்.

அதிரடியாக அடித்தாடிய அக்ஷர் பட்டேல் தனது முதல் அரைச்சதத்தை 20 பந்துகளில் பூர்த்தி செய்தார். வனிந்து ஹசரங்கவின் மூன்றாவது ஓவரில் அக்ஷர் பட்டேல் ஹட்ரிக் சிக்ஸர்கள் அடித்தார். சூர்யா ஒரு சிக்ஸரை அடித்தார். வனிந்து வழங்கிய 26 ஓட்டங்கள் மூலமாக இந்தியா பக்கமாக வெற்றி வாய்ப்பு உருவானது.

ஆனால் சூர்யகுமார் யாதவ் 51 (36) ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். 91 ஓட்டங்களை ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக சூர்யா, அக்ஷர் பட்டேல் ஆகியோர் பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டம் முறியடிக்கப்பட இலங்கை அணியின் வெற்றி உறுதியானது என்ற நிலை உருவாக களமிறங்கிய ஷிவம் மாவி அதிரடி நிகழ்த்தி மீண்டும் இந்தியா அணிக்கான வாய்ப்பை உருவாக்கினார்.

இறுதி ஓவரில் 21 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற நிலையில் தஸூன் ஷானக்க ஓட்டங்களை வழங்கினார். அத்தோடு அக்ஷர் பட்டேல் 65(31)ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இறுதி பந்தில் ஷிவம் மாவி 27(16) ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

கஸூன் ரஜித அபாரமாக பந்துவீசி ஓட்டங்களுக்கு விக்கெட்களை கைப்பற்றினார். டில்ஷான் மதுசங்க, தஸூன் ஷானக்க 2 விக்கெட்களையும், வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ண, ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.