கோவை வடவள்ளியில் மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த கணவன் – மனைவி சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் சாலை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர்(46). இவரது மனைவி நந்தினி(45). இவர்களது ஓரே மகன் ரவி கிருஷ்ணா(22). இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ரவி கிருஷ்ணா ஓண்ம் பண்டிகையை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து மறுநாள் காலையில் நண்பர்களுடன் காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். தென்னமநல்லூர் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள கிணற்றில் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

poison

தங்களது ஒரே மகன் விபத்தில் பலியானதால் சஞ்சிவ் சங்கர் – நந்தனி தம்பதியினர் மனமுடைந்து காணப்பட்டனர். அவர்களுக்கு உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். எனினும், வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட அவர்கள் , கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த இருவருரையும் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை நந்தினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சஞ்சீவ் சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையில், அன்று மதியம் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகன் இறந்த துக்கத்தில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.