தீமை என்னும் இருளை அகற்றி நன்மை என்னும் ஒளியை சமூகத்தில் பரப்புவதை மையப் பொருளாகக் கொண்டு, உலகம் முழுவதும் வாழ் இந்துக்கள் தீபங்களை ஏற்றி, எங்கும் ஒளி பரப்பி, தீபாவளிப் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது இனிய தீபாவளி வாழ்த்துகளைதெரிவிப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அச்செய்தியில்,

பிரிவினைக்கு ஆயிரம் காரணங்களை உருவாக்கினாலும், கட்சி, நிற, மத, இன பேதங்களை ஒதுக்கி, பொது அக்கறையுடன் செயற்பட வேண்டிய காலகட்டத்தை இன்று நாம் அடைந்துள்ளோம்.

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் இத்தருணத்தில், தீபாவளியின் உண்மையான அர்த்தத்தை மனதில் இருத்தி, பொது நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு, இந்த சவாலான நேரத்தை எதிர்கொள்ள உறுதி எடுத்தல் வேண்டும். “ஆன்மீக இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி, தீமையை அழித்து நன்மை, அறியாமையிலிருந்து அறிவொளி” என்பனவற்றைக் குறிக்கும் தீபாவளிப் பண்டிகையை அர்த்தமுள்ளதாக்கி, தனிமனித வெற்றியை விட பொதுவான ஆன்மீக முன்னேற்றத்தின் வெற்றியில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என பிரதமர் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.