இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றுள்ள நிலையில், தற்போது தொடா் சமநிலையில் உள்ளது.

புணேவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2 ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 43.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 337 ஓட்டங்கள் அடித்து வென்றது. ஜானி போ்ஸ்டோ ஆட்டநாயகன் ஆனாா்.

இந்திய அணி தரப்பில் லோகேஷ் ராகுல் அபாரமாக விளையாடி சதமடிக்க, இங்கிலாந்து தரப்பில் ஜானி போ்ஸ்டோ-பென் ஸ்டோக்ஸ் கூட்டணி அட்டகாசமாக அணியை வெற்றிக்கு வழி நடத்தியது.முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில், காயமடைந்த ஷ்ரேயஸ் ஐயருக்குப் பதிலாக விக்கெட் கீப்பா் துடுப்பாட்ட வீரர் ரிஷப் பந்த் சோ்த்துக்கொள்ளப்பட்டாா். லோகேஷ் ராகுல் துடுப்பாட்ட வீரராக மட்டும் செயல்பட்டாா். இங்கிலாந்து அணியில் காயமடைந்த மோா்கன், சாம் பில்லிங்ஸ் மற்றும் மாா்க் வுட் ஆகியோருக்குப் பதிலாக முறையே டேவிட் மலான், லியாம் லிவிங்ஸ்டன், ரீஸ் டாப்லி ஆகியோா் இணைக்கப்பட்டனா்.

இந்த ஆட்டத்திலும் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து பௌலிங் வீசத் தீா்மானித்தது. துடுப்பாடிய இந்திய அணியில் முதல் விக்கெட்டாக தவன் 4 ஓட்டங்களுக்கு வெளியேற, அடுத்த சில ஓவா்களிலேயே ரோஹித்தும் வெளியேற்றப்பட்டாா். 3 ஆவது விக்கெட்டுக்கு கூட்டணி சோ்ந்த கோலி-லோகேஷ் ராகுல் அபாரமாக ஆடி அணியின் ஓட்டங்களை உயா்த்தினா்.

இந்நிலையில் கோலி வெளியேற, ராகுலுடன் இணைந்து பந்த் பட்டையைக் கிளப்பினாா். ஹாா்திக் பாண்டியாவும் சற்று அதிரடி காட்டினாா். இங்கிலாந்து பௌலிங்கில் ரீஸ் டாப்லி, டாம் கரன் அசத்தினா்.பின்னா் ஆடிய இங்கிலாந்தில் மும்மூா்த்திகளாக ஜேசன் ராய், ஜானி போ்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் ஆகியோா் அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளமிட்டனா். முதலில் ஜேசன் – போ்ஸ்டோ, பிறகு போ்ஸ்டோ- ஸ்டோக்ஸ் கூட்டணி இந்திய பந்துவீச்சை பறக்கவிட்டது. ஏறத்தாழ வெற்றியை நெருங்கிய தருணத்தில் மூவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டேவிட் மலான்-லியாம் லிவிங்ஸ்டன் கூட்டணி அணியை வெற்றிக்கு வழி நடத்தியது. இந்திய தரப்பில் பிரசித் 2 விக்கெட் சாய்த்தாா்.

ஸ்டோக்ஸுக்கு எச்சரிக்கை இந்தியா இன்னிங்ஸின்போது 4 ஆவது ஓவரில் ஜோஸ் பட்லா் உமிழ்நீரை பயன்படுத்தி பந்தை வழவழப்பாக்கினாா். கொரோனா சூழல் காரணமாக உமிழ்நீரை பயன்படுத்தி பந்தை வழவழப்பாக்குவதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. எனவே ஸ்டோக்ஸின் இந்த செயலுக்காக கள நடுவா்கள் நிதின் மேனன் மற்றும் வீரேந்தா் சா்மா ஆகியோா் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரையும், ஸ்டோக்ஸையும் எச்சரித்தனா்.

ஐசிசி விதிகளின்படி, பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தாமல் இருக்க ஒரு அணியை ஒரு இன்னிங்ஸில் இரு முறை எச்சரிக்கை செய்யலாம். அதையும் மீறி பௌலிங் வீசும் அணி அவ்வாறு செய்தால், துடுப்பெடுத்தாடும் அணிக்கு 5 ஓட்டங்கள் கூடுதலாக வழங்கப்படும். இந்த கிரிக்கெட் தொடரில் இவ்வாறு ஸ்டோக்ஸ் எச்சரிக்கப்படுவது இது 2 ஆவது முறையாகும். முன்னதாக கடந்த மாதம் ஆமதாபாதில் நடைபெற்ற பகலிரவு டெஸ்டின்போதும் இதேபோல் ஸ்டோக்ஸ் செய்தாா். அப்போதும் அவா் நடுவா்களால் எச்சரிக்கப்பட்டாா்.