நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரம் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திலும் எவ்வித மாற்றமும் இன்றி தக்கவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2023 மார்ச் மாதத்துக்கு பிறகு, தான் கருதும் வேளையில் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.

பொதுத்தேர்தலின் பின்னர், நாடாளுமன்றம் கூடிய முதல் நாளில் இருந்து நான்கரை வருடங்களுக்கு பிறகே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்ற சரத்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இதன்காரணமாகவே ஆட்சிகவிழ்ப்பு சூழ்ச்சியின்போது, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்து முடிவு தவறு என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நான்கரை வருடங்கள் என்ற கால எல்லை 20 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக இரண்டரை வருடமாக்கப்பட்டது.

இந்நிலையில் அதனை நான்கரை வருடங்களாக்குவதற்கு மொட்டு கட்சியினர் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர். எனினும், அந்த கால எல்லை மாற்றப்படவில்லை.

அமைச்சரவை எண்ணிக்கை

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் இருக்க வேண்டும் என்ற ஏற்பாடு ’19’ இல் இருந்தது. ’20’ இலும் அந்த ஏற்பாடு தக்கவைக்கப்பட்டது. நிறைவேற்றப்பட்ட ’22’ ஆவது திருத்தச்சட்டத்திலும் அந்த ஏற்பாடு தொடர்கின்றது.

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை மட்டும் வகிக்க முடியும்.

அரசியலமைப்பு பேரவை

அரச சேவையில், அரசியல் தலையீடுகளை தவிர்த்து, சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளும் பிரதான நோக்கில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவை, ’20’ ஊடாக நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக நாடாளுமன்ற பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. எனினும், 22 ஊடாக அரசியலமைப்பு பேரவை மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளது. சிவில் பிரதிநிதிகள் இடம்பெறும். சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை மேற்படி பேரவையே ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும்.

மத்திய வங்கி ஆளுநர் நியமனம்கூட அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனேயே இடம்பெறவேண்டும். 19 இல்கூட இந்த ஏற்பாடு இருக்கவில்லை.

நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உட்பட ’20’ ஊடாக செய்யப்பட்ட நேர்த்தியான சில விடயங்கள் மாற்றப்படவில்லை.