டி20 உலககோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது. 

8வது 20 ஓவர் உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. மெல்போர்னில் நடைபெறும் இந்த போட்டி ரசிகர்களிடையே  எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் இரண்டு முறை மட்டுமே ஐசிசி தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றது. குறிப்பாக கடந்த ஆண்டு யுஏஇ-யில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த இலக்கை விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.  அதற்கு பழிவாங்க இந்திய அணி பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் பலமாக இருந்தாலும் பந்துவீச்சில் கடந்த சில நாட்களாக சொதப்பி வருகிறது. இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் வீராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் இந்தியா அணியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் பெரும் பலமாக இந்திய அணிக்கு உள்ளது.