கேட்பரி நிறுவனம் தயாரித்து வரும் டைரி மிலிக் உள்ளிட்ட சாக்லெட்டுகள் மாட்டுக்கறியில் தயாரிக்கப்படுவதாகவும், கேட்பரி விளம்பரத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டி அந்த நிறுவத்தை புறக்கணிக்க வேண்டும் என பாஜக ஆதரவாளர்கள் ட்விட்டரில் #BoycottCadbury என்ற ஹேஷ்டேக்கை தயாரித்து வருகின்றனர்.

கேட்பரி நிறுவனம் உலக புகழ்பெற்ற சாக்லெட்டுகளை தயாரித்து வருகிறது. இந்தியாவிலும் முன்னணி சாக்லெட் நிறுவனமாக கேட்பரி பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக கேட்பரி நிறுவனம் தயாரித்து வரும் டைரி மில்க் சாக்லெட் அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. 90ஸ் 2கே கிஸ்ட்சுகள் பலரது காதல் டைரி மில்கில் இருந்துதான் தொடங்குகிறது.

இது அல்லாமல் கேட்பரி நிறுவனம் தயாரித்து வரும் ஃபைவ் ஸ்டார், பெர்க், டைரி மில்க் சில்க், ஓரியோ பிஸ்கட் என அனைத்தையும் மக்கள் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். கேட்பரி சாக்லெட்டுகள் மட்டுமின்றி கேட்பரி நிறுவன விளம்பரங்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரை கவர்ந்து இழுத்து வருகிறது.

விளம்பரங்கள்

குறிப்பாக டைரி மில்க் விளம்பரத்தில் வரும் ஸ்வீட் எடு கொண்டாடு, ஓரியோ பிஸ்கட் விளம்பரம், கேட்பரி ஃயூஸ் சாக்லெட் விளம்பரம் என எதையும் மக்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கேட்பரி நிறுவன சாக்லெட்டுகளின் வெற்றிக்கு அதன் விளம்பரங்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி

இப்படி மக்கள் உள்ளங்களை கவர்ந்து இருக்கும் கேட்பரி நிறுவனம் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளது. அதற்கும் விளம்பரம்தான் காரணம். தீபாவளியை முன்னிட்டு கேட்பரி நிறுவனம் இந்தியில் வெளியிட்டு இருக்கும் செல்பிரேஷன் பேக் விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தந்தையை விமர்சனம் செய்து உள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.

விஸ்வ இந்து பரிஷத் தலைவி

இதுகுறித்து விஸ்வ இந்து பரிஷத் தலைவி சாத்வி பிராச்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கேட்பரி சாக்லெட் விளம்பரத்தில், கடையில்லாத ஏழை விளக்கு வியாபாரியின் பெயர் தாமோதர். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் தந்தையின் பெயர், குறைவான வெளிச்சத்தில் இருந்ததாக காட்ட முயல்கிறார்கள். கேட்பரி நிறுவனத்தை கண்டு வெட்கப்படுகிறேன்.” என்று விமர்சித்துள்ளார்.

மாட்டிறைச்சி புகார்

இது ஒருபுறம் இருக்க கேட்பரி சாக்லெட்டில் மாட்டுக்கறி இருப்பதாகவும், அதற்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறி அதை புறக்கணிக்க வேண்டும் என இந்துத்துவாவினர் ட்விட்டரில் #BoycottCadbury ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

பகிரப்படும் ஸ்க்ரீன் ஷாட்

கேட்பரி நிறுவனத்தின் இணையதளத்தின் ஸ்க்ரீன் ஷாட் என்று கூறி ஒரு படத்தை இந்த ஹேஷ்டேக்கின் கீழ் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில்,

“எங்களது ஏதாவது ஒரு பொருளில் ஜெலட்டின் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். ஜெலட்டின் என்றால் ஹலால் சான்று பெற்ற மாட்டுக்கறியில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. –

இந்துக்கள் உணர்வு

மேலும் சிலர் கேட்பரி நிறுவனம் இந்துக்களின் உணர்வை புண்படுத்திவிட்டதாகவும், அதனை புறக்கணித்து இந்திய நிறுவனங்களையும், இந்திய இனிப்பு வகைகளையும் சாப்பிட்டு ஊக்குவிக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சிலர் கேட்பரி நிறுவனத்துக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

கேட்பரி விளக்கம்

அதே நேரம் ட்விட்டரில் பகிரப்படும் ஸ்க்ரீன்ஷாட் ஆஸ்திரேலியாவில் விற்கப்படும் கேட்பரி சாக்லெட் பொருட்களுக்கானது என்றும், இந்தியாவில் 100% சைவ பொருட்களிலேயே இனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக 2021 ஆம் ஆண்டே அந்த நிறுவனம் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.