முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில் தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளின் தகவல்களை நீதி அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலகம் திரட்டுவதாக செய்திகள் வந்துள்ளன. என்ன நோக்கத்திற்காக இத் தகவல்கள் திரட்டப்படுகின்றன? என்பது தொடர்பில் முன்னாள் போராளிகள் மட்டுமல்ல பொதுமக்களும் அச்ச உணர்விலேயே உள்ளனர்.
இது தொடர்பில் நீதி அமைச்சு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் அத்தோடு வடகிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி மக்களுக்கு தெளிவூட்டல் பெற்றுக் கொடுப்பதோடு பாதிப்பு ஏற்படும் எனில் தடுத்து நிறுத்துவதற்கு கூட்டான செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டும்.
அண்மையில் கொழும்பில் வெள்ளத்தை போன்ற தமிழர் அதிகமாக வாழும் பிரதேசங்களில் வீடுகளில் தங்கி இருப்போர் தொடர்பாக பொலிசார் தகவல் திரட்டுவதாகவும் அவ்வாறான தகவல் படிவங்களை எவரும் நிரப்பி கொடுக்க வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பகிரங்கமாக கூறியதோடு இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருடனும், ஜனாதிபதியுடன் வினவுவதாக கூறியிருந்தார்.
இது இவ்வாறு இருக்க தற்போது தமிழர்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் தமிழர் பகுதியில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுவதாக கூறப்படுகின்றது.
முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில் தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும். இது உள ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு சுயமாகவே முன்னாள் போராளிகள் தமது ஜனநாயக செயற்பாட்டை மட்டுப்படுத்திக் கொள்ள வழிவகுக்கும். இது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
அண்மையில் அரசு கொண்டுவர முனைந்த புனர்வாழ்வு தொடர்பான திருத்தச்சட்டம் சமூகத்தில் எழுந்த சலசலப்பும் மக்களின் எதிர்ப்பும் சட்ட சிக்கலும் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டது. அச்சட்ட அமுலாக்கத்தை வேறு வகையில் நிறைவேற்றுவதற்காக முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றதா?
தெற்கின் போராட்டக் குழுவினர் தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களை முன்வைத்து அரசிற்கு எதிரான வீதி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தங்கள் சகாக்கள் மூன்று பேரைவிடுவிக்குமாறும், பயங்கரவாத சட்டத்தை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் பயங்கரவாத சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்க முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றதா?
இத்தகைய தகவல் திரட்டும் ஏற்பாடு முன்னாள் போராளிகளின் ஜனநாயக ரீதியான ரீதியிலான மாற்று அரசியல் செயற்பாட்டையும் அது தொடர்பான சிந்தனையையும் தடுக்கும். இது அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் சுதந்திர நடமாட்டத்தை கூட பாதிக்கும்.
அது மாத்திரமல்ல தற்போது மறைமுகமாக படையினரும் புலனாய்வு பிரிவினரும் இயங்குகின்ற நிலையில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டும் செயற்பாடு நேரடியாகவே அரச படைகள் தமிழர்களை கண்காணிப்பில் வைத்திருக்கவும், தமிழர்கள் வாழும் கிராமங்களை திறந்த வெளி புனர்வாழ்வு கிராமங்களாகவும் பேரினவாதம் முயற்சிக்கலாம். இது உடனே தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
இணைந்திருங்கள்