இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அது இலங்கையையும் பாதிக்கும் என இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகள் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

‘ரைம்ஸ் ஒஃப் இந்தியா’ விற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கைக்கு இடையேயான இருதரப்பு ஒப்பந்தத்திற்கு அமைய இந்தியாவின் விருப்பத்திற்கு எதிராக இலங்கை துறைமுகங்களை உபயோகிப்பதற்கு வெளிநாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கையினை மீட்பதற்கு இந்தியா திறவுகோலாக செயல்படுவதாக தெரிவித்த அவர், பூகோள ரீதியாக கேந்திர ஸ்தானத்தில் உள்ள இலங்கை, இந்தியாவுடன் இணைந்து ஜப்பான். இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராட்சிய நாடுகளுடன் முத்தரப்பு ஒத்துழைப்பு வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ள அவர், தற்போதைய பொருளாதார செயல்பாட்டை விரிவுபடுத்த முடியும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இலங்கை கடன் பிரச்சனையில் இருந்து துரித கதியில் மீள முடியும் என தான் நம்புவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகள் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.