ஆங்கிலக் கால்வாய் ஊடாக சிறிய படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்மையில், நாட்டுக்குள் படையெடுப்போர் என குற்றஞ்சாட்டியுள்ளார் உள்விவகார அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன். பாதுகாப்பு விதி மீறல்களுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் சுயெல்லா பிரேவர்மேன் தற்போது புகலிடம் கோருவோரை படையெடுப்பாளர்கள் என அவமதித்துள்ளார்.
பிரித்தானியாவில் புதிதாக பிரதமர் பொறுப்புக்கு வந்துள்ள ரிஷி சுனக்கால் பிரேவர்மேன் மீண்டும் உள்விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்களுக்கான விதிகளை மீறி நாடாளுமன்ற உறுப்பினரின் ஊழியருக்கு தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து அரசாங்க ஆவணத்தை அனுப்பியதற்காக இதே பதவியில் இருந்து அவர் ஆறு நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்திருந்த நிலையில்,
கடந்த வாரம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். புகலிடம் கோருவோர் தொடர்பில் நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் செயலிழந்து போயுள்ளது எனவும், தற்போது அது கட்டுக்குள் இல்லை எனவும் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உண்மையில் அவர்கள் ஆதரவற்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் என நம்புவதை நாம் கைவிட வேண்டும், மொத்த பிரித்தானிய மக்களுக்கும் உண்மை நிலை என்ன என்பது தெரியும் என அவர் காட்டமாக பதிலளித்துள்ளார்.
ஞாயிறன்று டோவர் பகுதியில் அமைந்துள்ள குடிவரவு மையம் மீது நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் வெளியான தகவலை அடுத்தே அமைச்சர் பிரேவர்மேன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
பிரித்தானியாவில் கடந்த இரு மாதங்களில் பொறுப்பேற்கும் மூன்றாவது பிரதமரான ரிஷி சுனக், தற்போது அமைச்சர் பிரேவர்மேனை மீண்டும் நியமித்தது தொடர்பில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
மேலும், உள்விவகார அமைச்சராக பிரேவர்மேன் தகுதியானவர் தான என்ற கேள்வியும் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ஆங்கிலக் கால்வாய் ஊடாக 39,000 புகலிடம் கோருவோர் பிரித்தானியாவில் நுழைந்துள்ளனர்.
இதேவேளை கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 28,526 என இருந்தது. அரசாங்கம் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், 90% புகலிடம் கோருவோரும் ஆண்கள் எனவும், இவர்கள் ஆதரவற்ற உணமையான அகதிகள் அல்ல எனவும், பொருளாதாரம் ஈட்டும் நோக்கில் புலம்பெயர்வோர் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, புகலிடம் கோருவோர்களை கையாள்வது நாடு எதிர்கொள்ளும் மிகவும் சவாலான பிரச்சினை என பிரித்தானிய வாக்காளர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
இணைந்திருங்கள்