” அன்றும் இன்றும் என்றும் நான் இணக்க அரசியலை முன்னெடுத்தவன். எனவே என்னைப் பொறுத்தவரை யாரும் இணைவது என்பது எனக்கு புதிய விடயமல்ல.

நான் யாரையும் விமர்சனம் செய்து அரசியல் செய்தவன் அல்லன். எனவே எந்த ஒரு விடயமும் முறையாக நடைமுறைபடுத்த வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கின்றேன்.

கூட்டணி தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும். எமக்கு கூட்டு பொறுப்பு இருக்க வேண்டும். எந்த ஒரு விடயமாக இருந்தாலும் நாம் அதனை கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும்.தன்னிச்சையான முடிவுகள் கூட்டணி தர்மத்தை கேள்விக்குறியாக்கும்.

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் நிர்வாக குழு கூட்டம் கடந்த (03.11.2022) நேற்று வியாழக்கிழமை ஹட்டனில் அமைந்துள்ள கிருஸ்ண பவான் மண்டபத்தில் நடைபெற்றுது.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக
கலந்துரையாடப்பட்டன .இதன்போது கடந்த வாரம் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை காரியாலய திறப்பு விழாவில் ஏற்பட்ட ஒரு சில விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை காரியாலய திறப்பு விழாவில் நான் இடைநடுவில் வெளியேறியமை தொடர்பாக பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன .அதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது.

அன்று நடைபெற்ற சம்பவம் என்பது மிகவும் தவறான ஒரு விடயம் என்பதை நான் மிகவும் தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.யார் அழைத்து யார் வந்தார்கள் என்பது தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் இருக்கலாம்.

ஆனால் ஒரு கூட்டணி என்ற குடும்பத்தில் முடிவுகள் எடுக்கப்படுகின்றபோது, அனைவரும் இணைந்து கலந்துரையாடி தீர்மானங்கள் எடுப்பதே கூட்டணி தர்மமாகும்.எனவே இதனை அணைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் அரசியலுக்கு வருகை தந்துள்ள காலம் முதல் இணக்க அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கரையுடன் செயற்பட்டவன். அதனை நான் பல சந்தரப்பங்களில் செயல்மூலம் நிருபித்திருக்கின்றேன். ஏனையவர்களை விமர்சிப்பதை நான் என்றுமே விரும்பாதவன்.

அன்றும் இன்றும் என்றும் நான் அரசியல் பயின்ற பாசறையான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீதும் அதன் மறைந்த தலைவர்களான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகிய இருவரையும் என்றுமே விமர்சனம் செய்ததோ அல்லது அவர்களின் தனிப்பட்ட விடயங்களை விமர்சிப்பதையோ தவிர்த்து வந்துள்ளேன்.

மேலும் நான் எந்த ஒரு அரசியல் கலந்துரையாடலாக இருந்தாலும் அதில் எனது மானசீக அரசியல் குரு அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் என்பதை துணிச்சலாக கூறியிருக்கின்றேன்.இதனை அன்று பலர் விமர்சித்தார்கள்.நான் அதனை கண்டு கொள்ளவில்லை.காரணம் உண்மையை உரக்க கூறுவதில் எந்த தவறும் இல்லை.அதுதான் எனது அரசியல் நாகரீகம்.

எனவே இன்று ஒரு சிலர் குறிப்பிடுவது போல நான் இணக்க அரசியல் செய்வதற்கு என்றுமே விரோதமானவன் அல்லன். ஆனால் அதனை செய்கின்றபோது அனைத்து தரப்பினரையும் கலந்துரையாடி செய்ய முடியுமாக இருந்தால் இன்னும் அது சிறப்பானதாக அமையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.