இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள், இலங்கை மாலுமிகள் 8 பேர் உள்பட 26 பேருடன் ‘எம்.டி. ஹெராயிக் இடன்’ என்ற எண்ணெய் கப்பல் கடந்த ஆகஸ்டு 12-ந் தேதி மத்திய ஆப்பிரிக்க நாடான இகுவாடரியல் கினியா கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலை அந்த நாட்டு கடற்படையினர் சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர். எண்ணெய் திருட்டில் ஈடுபட்டதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

இதனால் கடந்த சுமார் 3 மாதங்களாக இந்திய மாலுமிகள் உள்பட 26 பேரும் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். இது அவர்களது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இகுவாடரியல் கினியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்களை உடனடியாக மீட்குமாறு இந்திய மாலுமிகள் வீடியோ பதிவு வெளியிட்டு உள்ளனர். இது வைரலாக பரவி வருகிறது. இந்த மாலுமிகளை உடனடியாக மீட்குமாறு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு மாநிலங்களவை எம்.பி. ரகீம் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் இந்திய விவகாரத்தில் அவசரமாக தலையிட்டு தீர்வு காணுமாறு தனது டுவிட்டர் தளத்திலும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே இகுவாடரியல் கினியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள 16 மாலுமிகளை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அங்குள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில், ’16 மாலுமிகளை விரைவாக மீட்பதற்கு நமது தூதரகமும், அபுஜாவில் உள்ள துணை தூதரகமும் இகுவாடரியல் கினியா மற்றும் நைஜீரிய அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது அவர்கள் தடுப்புக்காவல் மையத்தில் இருந்து கப்பலுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்’ என குறிப்பிட்டு உள்ளது. அந்த மாலுமிகளுடன் தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ள தூதரகம், அவர்களை தொடர்ந்து தூதர்கள் சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளது.