ஷரோன் ராஜ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான கிரீஷ்மா, 2 மாதங்களில் 10 முறை காதலனைக் கொல்ல முயன்றதாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸார் கிரீஷ்மாவை ஷரோனின் கல்லூரி அமைந்துள்ள நெய்யூருக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர் இந்த அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தை அளித்தார். வாக்குமூலத்தில் 10 முறை ஜூஸில் அதிக அளவு பாராசிட்டமால் மாத்திரைகளை கலந்து ஷரோனை கொல்ல கிரீஷ்மா முயன்றதாக கூறினார்.

இந்த முயற்சியின் ஒரு பகுதி தான் கல்லூரியில் நடந்த ஜூஸ் சவால் என்று கிரீஷ்மா ஒப்புக்கொண்டதாக விசாரணைக் குழு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது. இதற்காக அவர் கையில் 50-க்கும் மேற்பட்ட பாராசிட்டமால் மாத்திரைகள் இருந்ததாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

கடைசியாக 11-வது முறையாக வீட்டிற்கு அழைத்துகிச்சென்று ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தபோது அதில் ஏற்பட்ட தாக்கத்தால் ஷரோன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

கிரீஷ்மா வீட்டில் இருந்து, ஆயுர்வேத கஷாயம் தயாரிக்கப் பயன்படுத்திய பவுடர், பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப் பயன்படுத்திய பாத்திரங்கள், பாட்டில், அறையின் தரையில் விழுந்து கிடந்த பூச்சிக்கொல்லி மருந்தை துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றை இந்த வழக்கை விசாரணைக் குழுவினர் திங்கள்கிழமையன்று மீட்டுள்ளனர்.

விசாரணைக் குழுவின் படி, கிரீஷ்மா ஜூஸில் விஷம் கலந்து ஷரோனைக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக அக்டோபர் 30-ஆம் திகதி கிரீஷ்மாவை வரவழைத்து பொலிஸார் விசாரணை நடத்தினர். மூலிகை கஷாயத்தில் விஷம் கலந்து காதலனை கொன்றதை ஒப்புக்கொண்ட அவர், தனது எதிர்கால திருமண வாழ்க்கைக்கு காதலன் ஷரோன் இடையூறாக இருப்பார் என நினைத்து உறவை முறித்துக் கொள்ள விரும்பியதாகவும் அந்த விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், அவரை கைது செய்த பொலிஸார், அக்டோபர் 31-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நெடுமங்காடு பொலிஸ் சூப்பிரண்டு அலுவலக கழிப்பறையில் கிருமிநாசினி குடித்து தற்கொலைக்கு முயன்ற அவர், சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையில், ஆதாரங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர், பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர், ஆனால், கிரீஷ்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் பொலிஸார் மேலும் விசாரிக்கவில்லை.

பின்னர் கிரீஷ்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அட்டகுளங்கரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, கிரீஷ்மாவை நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார், அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

விசாரணை செயல்முறை மற்றும் கிரீஷ்மாவை கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துவதை வீடியோவில் பதிவு செய்து, அதனை சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.