தமிழகத்தில் போலி வங்கி நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிட் என்ற பெயரில் போலியான வங்கி செயல்பட்டு வருவதாக, ரிசர்வ் வங்கியின் மண்டல பொது மேலாளர் பொலிஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து வங்கி மோசடி தடுப்புப் பிரிவு பொலிஸார் இதுதொடர்பில் விசாரணை நடத்தினர். அப்போது, சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்த சந்திரபோஸ் இந்த மோசடியை செய்திருப்பது தெரிய வந்தது.

சென்னை அம்பத்தூரில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிட் என்ற பெயரில் சந்திரபோஸ் போலி வங்கியை நடத்தி வந்துள்ளார். அந்த வங்கியின் கிளைகளை சேலம், விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கோவை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் அவர் தொடங்கியிருக்கிறார்.

இதனை நம்பி சுமார் 3000 வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கு தொடங்கி, கோடிக்கணக்கில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரபோஸை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கடந்த 2016ஆம் ஆண்டில் நிதி நிறுவனம் போன்று தொடங்கிய சந்திரபோஸ், பின்னர் வங்கியை போன்று நடத்தி வந்துள்ளார். அதன்மூலம் வாராந்திர கடன், மாதாந்திர கடன் என பல்வேறு திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்திரபோஸிடம் இருந்து ரிசர்வ் வங்கியின் போலியான அனுமதி சான்று, போலியான வங்கி முத்திரைகள், போலியான ஆவணங்கள், போலியான வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் அவரது சொகுசு காரையும் பொலிஸார் கைப்பற்றினர். சந்திரபோஸ் லண்டனில் MBA படித்தவர் என்றும், வங்கி செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டு அவர் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.