குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், நவ்சாரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். கிராம மக்கள் சார்பில் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ‘ரெயில் இல்லை, ஓட்டும் இல்லை’ என எழுதப்பட்டுள்ளது.

இங்குள்ள அஞ்செலி ரெயில் நிலையத்தில் ரெயில்களை நிறுத்துமாறு கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் ஆத்திரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி, பா.ஜ.க மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் வருவதற்கும், கிராமத்தில் பிரசாரம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்காததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நபர் வேறு இடத்திற்குச் செல்ல குறைந்தபட்சம் ரூ.300 செலவழிக்க வேண்டும். கிராமத்தில் வசிக்கும் மாணவர்களும் படிப்பில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், பெரும்பாலும் அவர்கள் கல்லூரிக்குச் செல்வதற்கு தாமதமாகிறது. இதனால் கல்வி பாதிக்கப்படுகிறது என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். முன்பு ஒரு பயணிகள் ரெயில் இங்கு நின்று கொண்டிருந்தது, பின்னர் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும், கொரோனா காலத்தின் போது, ​​இந்த நிலையத்தில் ரெயில்கள் நிறுத்தப்படவில்லை.

தற்போது அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், இப்போதும் இங்கு ரெயில்கள் நிற்கவில்லை. இங்கு ரெயில் நிற்காவிட்டால் வாக்குப்பதிவு நாளில் யாரும் வாக்களிக்க செல்ல மாட்டார்கள் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தேர்தலன்று, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி வருகிறதோ அப்படியே, ஒரு ஓட்டு கூட பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பப்படும் என்கின்றனர்.