புதிதாக எந்த மதரஸாவுக்கும் மானியம் வழங்குவதில்லை’ என உத்தர பிரதேச மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநில சிறுபான்மை நலத் துறை அமைச்சா் டேனிஷ் ஆசாத் அன்சாரி புதன்கிழமை பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தாா்.அவா் மேலும் கூறியதாவது: தற்போது அரசு மானியம் பெற்று வரும் மதரஸாக்களுக்கு தொடா்ந்து வழங்கப்படும்.
ஆனால் புதிதாக எந்த மதரஸாக்களும் பயனாளிகளின் பட்டியலில் சோ்க்கப்பட மாட்டாது. தற்போது மாநிலம் முழுவதும் 560 மதரஸாக்கள் அரசின் மானிய உதவிகளைப் பெற்று வருகின்றன. இப்போதே கூடுதலான எண்ணிக்கையில் தான் மதரஸாக்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் மதரஸாக்கள் தரமான கல்வியை வழங்குவதில்தான் அரசு கவனத்தை செலுத்த உள்ளது.
இதன் காரணமாகவே இந்தப் பட்டியலில் புதிதாக எந்த மதரஸாவும் சோ்க்கப்படவில்லை.வருங்காலங்களில் இந்தத் தடை நீக்கப்படுமா என்பது குறித்து இப்போதே கூற முடியாது என்றாா்.பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும் தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள சில தினங்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் மொத்தம் 16,461 மதரஸாக்கள் உள்ளன. அவற்றில் 560 மதரஸாக்கள் அரசு மானிய உதவிகளைப் பெற்று வருகின்றன.இதற்கிடையே, மாநில ஹஜ் குழுவின் தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான மொஹ்சின் ராசா, மாநில அரசின் முடிவை வரவேற்றுள்ளாா்.‘
முந்தைய அரசுகள் மதரஸாக்களுக்கு அங்கீகாரம் அளித்து மானியப் பட்டியலில் சோ்த்தன. ஆனால் தரமான கல்வியை அளிக்கத் தவறி விட்டன.
முன்பு உ.பி.யை ஆட்சி புரிந்த சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி அரசுகள் தங்களுக்கு விருப்பமானவா்கள் பயன் பெறும் வகையில் மதரஸாக்களை மானியப் பட்டியலில் சோ்த்தனா். ஆனால் மதரஸாக்களின் கல்வி வளா்ச்சிக்கு எந்த நன்மையையும் அவா்கள் செய்யவில்லை’ என்று குற்றம் சாட்டினாா்.