தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான நியாயமான தீர்வினை வழங்குதை மையப்படுத்திய பேச்சுக்களை எந்தத் தரப்பினருடனும் முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம் எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எனினும், எம்முடன் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று பலதடவைகள் கூறப்பட்டாலும் அவை இதய சுத்தியுடன் இடம்பெற்றாதாக இல்லை. ஆகவே வெறுமனே பேச்சுவார்த்தையென்ற விடயம் உதட்டளவில் இல்லாது, நடைமுறையில் செயல்வடிவம் பெறுவதாக அமைய வேண்டும்.

அதேநேரம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார். இதுவரையில் அதற்கான உத்தியோக பூர்வமான அழைப்புக்கள் எவையும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அவர் எடுத்துவருகின்ற முயற்சிகளையும் அறிவிப்புக்களையும் வரவேற்கின்றோம். ஆனால் அது உடனடியாக செயல்வடிவம் பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், புதிய அரசியலமைப்பொன்றின் ஊடாகவே தேசிய இனப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைக் காண முடியும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அதற்காக 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டு வழிநடத்தல்குழு ஸ்தாபிக்கப்பட்டு ஒரு இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டது.

எனினும் அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டு விட்டது. குறித்த செயற்பாட்டில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தபோதும் இறுதியில் ஏமாற்றுப்பட்டோம். மீண்டும் அவ்வாறான நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு தயாரில்லை. ஆகவே உதட்டளவில் விடுக்கப்பட்ட அறிவிப்புக்களுக்கு செயல்வடிவம் அளிப்பதற்கான நடவடிக்கைகள் தாதமின்றி முன்னெடுக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டு அவை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.