ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால், இலங்கைக்கு எதிரான யோசனையை முன்வைக்காமல் தடுப்பதற்கு, தற்போதைய அரசாங்கம் சரியான இராஜதந்திர அரசியல் வழிமுறைகளை முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, இதன்மூலம் கிடைக்கும் பிரதிபலனை, அரசாங்கம், ஜனாதிபதி, அமைச்சர்கள் மாத்திரமல்ல, முழு இலங்கைச் சமூகமும் எதிர்காலத்தில் அனுபவிக்கும் என்றார்.

எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்துரைத்த அவர், இதைப் பாரிய பிரச்சினையாக நாம் பார்க்கிறோம் எனத் தெரிவித்ததோடு, இந்தச் செயற்பாட்டை நல்லாட்சியே ஆரம்பித்ததெனக் காட்டவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் குற்றஞ்சாட்டினார்.ஆனால், இந்த விடயத்தில் சர்வதேசத் தலையீடு ஏற்பட, தற்போதைய பிரதமர் மகிந்தவே காரணமாக அமைந்தார் என்றும் கூறிய சம்பிக்க எம்.பி, யுத்தம் நிறைவடைந்த பின்னர், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், பொறுப்புக்கூறல் என்ற இணக்கப்பாட்டை மகிந்த ராஜபக்ஸ ஏற்படுத்திக்கொண்டார் என்றும் இந்தப் பொறுப்புக் கூறல் தொடர்பான அர்த்தத்தை அப்போதைய அரச தலைவர் அறிந்து செயற்படுகிறாரா என நாம் கேள்விக்கு உட்படுத்தினோம்.

ஆனால் இந்தப் பொறுப்புக்கூறலே, இன்றைய பிரச்சினைக்குக் காரணமாக அமைந்துள்ளதென சுட்டிக் காட்டியுள்ளார்.“நாமும் தவறொன்று செய்ததோம். அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எம்மிடம் கேட்காமலேயே மனித உரிமைகள் பேரவையின் யோசனைக்கு இணை அனுசரணை வழங்கினார். இதைச் செய்யாமல் இருந்திருக்கலாம் என்று சிந்தித்தோம். எனினும், குறித்த காலப்பகுதியில் நாட்டைப் பயமுறுத்தவோ, யுத்தக் குற்றங்கள் குறித்து மின்சார கதிரைக்கு அழைத்தச் செல்லவோ, சர்வதேச நீதிமன்றத்தக்கு கொண்டுசெல்லவோ இல்லை. 5 வருடங்கள் இந்த யோசனையை ஒத்திவைக்கப்பட்டதே நடந்தது” எனக் குறிப்பிட்டள்ளார்.

இந்த அரசாங்கம், தமது கொள்கைகளையும் திட்டங்களையும் மாற்றுவதன் மூலமே, இன்று இவ்வாறான பிரச்சினையை இலங்கை சந்தித்துள்ளது என்றும் யுத்தத்தின் பின்னர் எமது நாடு செயற்பட்ட விதமே இன்றைய பிரச்சினைக்குக் காரணமாகவுள்ளது என்றும், குறிப்பாக வடக்கிலும் தெற்கிலும் சட்டத்தைப் பாதுகாக்கவோ மனித உரிமைகளைப் பாதுகாக்கவோ அரசாங்கம் செயற்படவில்லை. தமக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்துபவர்களைச் சிறையில் அடைக்கவும் அவர்களின் பிரஜாவுரிமையை இரத்துச் செய்து, அவர்களைத் தேர்தல் செயற்பாடுகளிலிருந்து தூரமாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாகச் செயற்பட்டுள்ளது” எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.