மாத்தளை நகர மத்திய சந்தை கட்டடத்திற்கு எதிரே அமைந்துள்ள பிரதான மணிக்கூடு கோபுரத்திலுள்ள கடிகாரம் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக செயலிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இது சம்பந்தமாக மாத்தளை மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோருக்கு தெரிவித்த போதும் இதுவரை கடிகாரம் திருத்தப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 100 வருடங்கள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த மணிக்கூடு கோபுரத்திலுள்ள கடிகாரம் சரியான நேரத்தை காட்டியதாகவும்,மாநகர சபை ஆட்சியாளரால் டிஜிட்டல் முறைமைக்கு மாற்றியமைக்கப்பட்டதன் பின்னர் சில காலங்களில் முற்றாகவே செயலிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தளை மாநகர சபையை சேர்ந்த அனைவரும் காலை, மாலை இம்மணிக்கூட்டுக்கோபுரத்தை கடந்து பயணித்த போதும் செயலிழந்து காணப்படும் கடிகாரம் இவர்களின் கண்களுக்கு தென்படாமை பற்றி பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.