தலைநகர் கீவ்வில் சுமார் 600,000 வீடுகள் கடந்த 30 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் இருட்டுக்குள் இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 9 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகளின் மன சோர்வு மற்றும் உக்ரைனிய படைகளின் பதில் தாக்குதல் ஆகியவற்றால் போரின் ஆரம்ப நாட்களில் ரஷ்ய படைகள் கைப்பற்றி வைத்து இருந்த நகரங்களை கூட தற்போது உக்ரைனிடம் இழந்து வருகிறது.

ஏற்கனவே போரின் விளைவாக உக்ரைனின் பெருவாரியான உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்து இருக்கும் நிலையில் தற்போது ரஷ்ய படைகள் உக்ரைனின் சக்தி நிலையங்கள்(மின் உற்பத்தி நிலையங்கள்) மீது தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷ்ய படைகளின் இந்த தாக்குதல் மூலம் உக்ரைனின் பல பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருளுக்குள் மூழ்கி உள்ளது.

உக்ரைனின் இந்த இருட்டிப்பு நிகழ்வை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ரஷ்யாவின் தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைனின் காட்சிகளை செயற்கைக்கோள் மூலம் படம் பிடித்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

நாட்டில் சுமார் ஆறு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் இந்த வாரம் மின்வெட்டை சந்தித்துள்ளன என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் பெரும்பாலான பிரச்சனைகள் தற்போது உக்ரைனின் தலைநகரிலும், ஒடெசா, எல்விவ், வின்னிட்சியா மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளிலும் உள்ளன என்றும் ஸ்பைக் பவர் டிராக்கள் ஒவ்வொரு மாலையும் பதிவு செய்யப்படுகின்றன, இது அவசரகால இருட்டடிப்புகளை அதிகரிக்கிறது.

எனவே மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன் ரஷ்ய ஷெல் தாக்குதல்கள் ஏற்பட்டால், அனைத்து அத்தியாவசிய சேவைகளும் அதன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய, நாடு மின்சார விநியோக வலையமைப்பை உருவாக்கி வருவதாக உக்ரேனிய ஜனாதிபதி முன்னர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.