உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார் என்று வட கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக அளவில் தற்போதைய சூழலில் இராணுவ பலத்தின் பெரும்பான்மையை காட்ட கொள்ள அமெரிக்கா, சீனா மற்றும் வட கொரியா இடையே முக்கோண மோதல் நடைபெற்று வருகிறது. சீனா தங்களது அண்டை பிராந்தியமான தைவானை தங்கள் நாட்டின் ஒற்றை பகுதியாக அறிவித்ததை தொடர்ந்து சீனாவும் அமெரிக்காவும் அதில் முட்டி மோதி வருகின்றனர்.

அதைப்போல தென் கொரியாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே பதற்றம் கடந்த 2017ம் ஆண்டு முதல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், தென் கொரியா-விற்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் தென் சீனக் கடல் பகுதி மற்றும் கொரிய தீபகற்ப பகுதி இரண்டிலும் அமெரிக்கா, சீனா, வட கொரியா ஆகிய மூன்று நாடுகளின் இராணுவ போட்டி நடந்து வருகிறது. இதற்கிடையில் அவ்வப்போது வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஏவுகணை சோதனை நடத்தி பதற்றத்தை கூட்டி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்தோனேசியாவின் பாலி-யில் நடைபெற்ற உலக தலைவர்களின் ஜி 20 மாநாட்டில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை சீனா கண்டிக்காததற்கு மேற்கத்திய நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

தைவான் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஏற்கனவே மோதல் போக்கு இருக்கும் நிலையில், ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் இருவரும் சந்தித்து பேசினார்கள்.

அப்போது தைவான் குறித்தும், தென் கொரியாவின் மீதான வட கொரியாவின் அச்சுறுத்தலை நிறுத்தவும் சீன முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஜோ பைடன் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்தன.

ஜி 20 மாநாட்டில் இத்தகைய பேச்சு வார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு கொண்டி இருந்த அதே நேரத்தில் வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்தது அதிர்ச்சி அளித்தது.

வட கொரிய ஜனாதிபதி இவ்வாறு பதற்றத்தை அதிகரிக்க, சீன ஜனாதிபதியோ அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு நேர் மாறாக வட கொரியாவுடன் கைகோர்க்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பாக வட கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது, இது மேற்கத்திய நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது.