டெல்லியில் இளம்பெண் சாரதாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள அவரது காதலன் அப்தாப் அமீனிடம் மிக முக்கியமான சோதனையாக கருதப்படும் ‘நார்க்கோ’ சோதனை முடிவடைந்ததது. இந்த சோதனையில் பல திடுக்கிடும் தகவல்களை அப்தாப் கூறியதாக டெல்லி போலீஸார் கூறுகின்றனர். தாங்கள் எதற்காக இந்த சோதனை நடத்தினோமோ அதற்கு பலன் கிடைத்துள்ளதாகவும் போலீஸ் வட்டரங்கள் தெரிவித்தன.

நாட்டையே உலுக்கிய டெல்லி சாரதா கொலை வழக்கில் இந்த சோதனையின் மூலம் பல மர்மமான கேள்விகளுக்கு பதில் கிடைககும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் தன்னுடன் லிவிங் டுகெதர் (Living Together) உறவில் இருந்த தனது காதலி சாரதாவை அப்தாப் அமீன் கொலை செய்த சம்பவம் இந்தியாவையும் தாண்டி உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால், சாதாரண கொலை போல அல்லாமல் சாரதாவை 35 துண்டுகளாக வெட்டியும், அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தும் அப்தாப் செய்த செயல்கள் அனைத்தும் ஒரு பயங்கர த்ரில்லர் சைக்கோ படங்களை நினைவூட்டுவதாக இருந்தது. உண்மையிலேயே, ஒரு சைக்கோ சீரியலை பார்த்து ஈர்க்கப்பட்டே இந்த கொலையை செய்ததாக அப்தாப் அமீனே வாக்குமூலம் அளித்துள்ளான்.

கடந்த மே மாதம் நடந்த இந்தக் கொலை இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, அப்தாப்பை கைது செய்த போலீஸார் அவரிடம் மூன்று வாரங்களுக்கு மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது அவரது முக பாவனைகள் மனநல நிபுணர்களை வைத்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அப்போது, இந்த சாரதா கொலையை தவிர வேறு ஏதோ ஒரு பெரிய சம்பவத்தை அப்தாப் மறைப்பதாக மனநல நிபுணர்கள் தெரிவித்தனர். இதனால் அப்தாப் ஒரு சீரியல் சைக்கோ கில்லராக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கும் வந்தது. மேலும், அவரது சில நடவடிக்கைகளும் சைக்கோ கில்லர்களை ஒத்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக, அப்தாப் அமீனுக்கு உண்மைக் கண்டறியும் சோதனையை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். ஆனால், கடைசி நேரத்தில் வந்த காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் அப்தாப் அமீனுக்கு நடத்தப்பட்ட இந்த சோதனை போலீஸாருககு திருப்திகரமாக இல்லை. எனவே, உண்மைக் கண்டறியும் சோதனையை விட அதிக நம்பகத்தன்மை வாய்ந்த ‘நார்க்கோ’ சோதனையை அப்தாப்புக்கு நடத்த போலீஸார் முடிவு செய்தனர். சோடியம் பென்ட்டோதால் உள்ளிட்ட வேதிப்பொருட்களை நரம்பில் செலுத்தி இந்த சோதனை செய்யப்படும். இந்த சோதனையின் போது சம்பந்தப்பட்ட நபர் சுயநினைவை இழப்பார்கள். ஆனால், அவர் வாழ்க்கையில் சிறு வயது முதல் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மூளை நியாபகப்படுத்தும்.

அதன்படி, இன்று காலை அப்தாப்பிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது சாரதாவை கொலை செய்தது ஏன்? எப்படி கொலை செய்தீர்கள்? கொலை செய்ததற்கு பின்னர் அழுதீர்களா? சாரதாவுக்கு முன்பு வேறு யாரையாவது கொலை செய்திருக்கிறீர்களா? என்பன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அப்தாப் அளித்திருக்கும் பதிலும், அவர் சுயநினைவுடன் இருக்கும் போது அளித்திருந்த வாக்குமூலமும் பல இடங்களில் முரண்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சுயநினைவுடன் சொன்னதை காட்டிலும் பல திடுக்கிடும் தகவல்களையும், புதிய விஷயங்களையும் இந்த நார்க்கோ சோதனையில் அப்தாப் கூறியதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.