தென்மேற்கு பருவமழை காலம் கடந்த 23-ந் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) இந்திய பகுதிகளில் இருந்து விலகிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 45 சதவீதத்துக்கும் அதிகமாக மழை பதிவாகியிருந்தது. வழக்கமாக தென்மேற்கு பருவமழையை விட, வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழையை தமிழகம் பெறும். எனவே வடகிழக்கு பருவமழையை தமிழ்நாடு, புதுச்சேரி எதிர்பார்த்து இருக்கின்றன.

வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 3-வது வார இறுதியிலோ அல்லது 4-வது வார தொடக்கத்திலோ தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வங்க கடலில் நிலைகொண்டிருந்த புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. 29-ந் தேதி தொடங்க வாய்ப்பு இந்தநிலையில், வங்க கடலில் நிலைகொண்டிருந்த ‘சிட்ரங்’ புயல் கரையை கடந்துவிட்டதால், வடகிழக்கு பருவமழை வருகிற 29-ந் தேதியையொட்டி (நாளை மறுதினம்), தமிழ்நாடு, புதுச்சேரியில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்து இருக்கிறது.

இதன் காரணமாக 29-ந் தேதி தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இன்றும், நாளையும் மிதமான மழை முன்னதாக, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்றும் (வியாழக்கிழமை), ஒரு சில இடங்களில் நாளையும் (வெள்ளிக்கிழமை) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், வத்திராயிருப்பு 4 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூர் 3 செ.மீ., கடம்பூர், ராஜபாளையம் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.