சூழல் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி பெருமிதமாக குறிப்பிடுகிறார். ஆனால் புவிச்சரிதவியல் திணைக்களம் சூழல் பாதிப்புக்கு பிரதான நிறுவனமாக காணப்படுகிறது, ஆகவே புவிசரிதவியல் மற்றும் சுரங்க திணைக்களத்தின் தலைவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும்.15 நாட்களுக்கு காலஅவகாசம் வழங்குவேன். 15 நாட்களுக்குள் பதவி அவரை பதவி நீக்காவிடின் சுற்றுச் சூழல் தொடர்பில் சர்வதேச ஊடக சந்திப்பை நடத்துவேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு,வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு,சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வனத்துறை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளினால் வடக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும்,பாராளுமன்றத்திலும் உரையாற்றி இதுவரை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை.கிழக்கு மாகாண அபிவிருத்தி குழு தலைவர் இவ்விடயத்தில் எம்முடன் இணங்குவார் என எதிர்பார்க்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்டம்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் யானை மோதல் தாக்குதலினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை, வவுனத்தீவு, செங்கலடி மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களிலும், கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள், விளை நிலங்களுக்கு யானைகள் உட்புகுந்து பயிர்களை நாசம் செய்து,மக்களின் குடியிறுப்புக்களில் புகுந்து வீடுகளுக்கு சேதம் விளைவிக்கிறது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை திட்டம் வகுக்கப்பட வேண்டும். வனஜீவராசிகள் அதிகாரிகள் மற்றும் வன சேவையாளர்களுக்கு வனவளத்துறை தொடர்பான தொழினுட்ப ரீதியான பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

பல ஆண்டு காலமபாக வனவளத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. வனவள அதிகாரிகளின் சேவை முழுமையாக செயற்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்கள் பாரம்பரியமாக விவசாயம் காணிகளுகளை வனவளத்துறையினர் ஆக்கிரமித்து விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளார்கள்.