கொழும்பு – பொரளை, கொட்டா வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் மற்றும் விதைப் பை வர்த்தகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரதான தரகரான நபரை அடையாளம் காண மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் சில்வாவின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு குழுவொன்று இது தொடர்பில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், பிரதான தரகரான பாய் என அறியப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும் அவரது உண்மையான அடையாளம் தொடர்பில் உறுதி செய்துகொள்ள சி.சி.டி.யினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வறிய குடும்பங்களை இலக்கு வைத்து சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பில், பொரளை பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற 5 முறைப்பாடுகள் தொடர்பில், சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவிடம் முதல் தகவலறிக்கை சமர்ப்பித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சி.சி.டி. பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் சில்வாவின் கீழ் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விசாரணைகளில் ஒரு அங்கமாக புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யும் போது, சட்டவிரோத விதைப்பை வர்த்தக நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இரு உடலுறுப்பு விற்பனையிலும் பாய் என்ற நபர் தொடர்புபட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையிலேயே மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.