வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு முதல்2 மழைப்பொழிவில் எதிர்பார்த்த மழை பெய்தது. அதன் பின்னர், மழை சற்று குறைந்திருந்தது. இதன் காரணமாக, வடகிழக்குபருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாக வேண்டிய மழைப் பொழிவைவிட 4 சதவீதம் குறைவாகவே பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் வங்க கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெறும் என்றும், இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் மழை இருக்கும் என்றும் ஏற்கனவே சொல்லப்பட்டது.
வங்க கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (புதன்கிழமை) இரவுக்குள் புயல் சின்னமாக வலுவடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் உருவாகும்பட்சத்தில், புதிய புயலுக்கு ‘மேண்டஸ்’ என்று வானிலை ஆய்வு மையத்தால் பெயரிடப்பட இருக்கிறது. இந்த பெயரை ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்து உள்ளது.
புயல் சின்னம் இன்று உருவாக உள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என்றும், நாளை (வியாழக்கிழமை) முதல் 10-ந்தேதி (சனிக்கிழமை) வரை தமிழகத்தில் பல இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
வருகிற 10-ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
புயல் காரணமாக தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளையும், நாளை மறுதினமும் மணிக்கு 70 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலான வேகத்திலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், வட இலங்கை கடலோரப் பகுதிகளில் நாளை, நாளை மறுதினம், அதற்கு அடுத்த நாள் மணிக்கு 50 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலான வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இணைந்திருங்கள்