ஆக்சிஜன் இல்லாமல் டெல்லி மருத்துவமனையில் 20 கொரோனா நோயாளிகள் பரிதாப பலி20 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மரணமடைந்த மருத்துவமனை.தலைநகர் டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த 20 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்த கொடுமை ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் நடந்துள்ளது.  

 சனிக்கிழமை காலையும் கூட 45 நிமிடங்களுக்குத்தான் இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் இருந்துள்ளது. அரசு உதவி கேட்டு போராடி வருகின்றனர் மருத்துவமனை நிர்வாகிகள். ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பலூஜா முன்னணி ஆங்கில நாளேடு ஒன்றிடம் இருக்கும் நிலவரத்தைச் சுட்டிக் காட்டி கூறுகையில், “ஆக்சிஜன் நெருக்கடியினால் 20 தீவிர கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் கையிருப்பு முற்றிலும் இல்லாமல் போகவில்லை, ஆனால் குறைந்த அழுத்த ஆக்சிஜனே இருந்தது. போதவில்லை.” என்றார். இந்த மருத்துவமனையில் 210 நோயாளிகள் உள்ளனர் என்று கூறும் பலூஜா இன்று காலை 10.15 மணியளவில் 45 நிமிடங்களுக்குத்தான் ஆக்சிஜன் இருப்பதாக தெரிவித்தார். 

வெள்ளிக்கிழமை 5 மணிக்குள் 3,600 லிட்டர் ஆக்சிஜன் மருத்துவமனைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் 12 மணியளவில் 1,500 லிட்டர்கள் மட்டுமே வந்தது, 7 மணி நேரம் தாமதத்தினால் ஆக்சிஜன் அழுத்தம் குறையத் தொடங்கியது. ரீஃபில் செய்தாலும் அழுத்தம் ஏற நேரம் எடுக்கின்றது என்கிறார் டாக்டர் பலூஜா. டெல்லியில் உள்ள இன்னொரு மருத்துவமனையான பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்தவுடன் டெல்லி அரசின் சப்ளை வந்துள்ளது. 

டெல்லிக்கு ஆக்சிஜன் சப்ளையை ஹரியாணா, உ.பி. இடையூறு செய்வதாக டெல்லி அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. எப்போதும் 48 மணி நேரத்துக்கான ஆக்சிஜன் ஸ்டாக் கைவசம் இருப்பதுதான் சிறந்தது என்கின்றனர் டெல்லி மருத்துவர்கள். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் 12-18 மணி நேரத்துக்கான கூடுதல் ஸ்டாக்குகள் மட்டுமே வைத்துள்ளனர், இது நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகும் போது விரைவில் தீர்ந்து விடுகிறது. 

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தைக் நெருங்கியுள்ளது. ஒரே நாளில் 2,624 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,66,10,481ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,19,838 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

இதனால் மொத்தமாகக் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,38,67,997 என்றளவில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் 25,52,940 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு நாடு முழுவதும் 1,84,657 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,104 பேர் பலியாகினர். இதுவரை மொத்தம் 13,83,79,832 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.