பாரதி ஆனந்த்

“இந்தப் போருக்கு இடையே பிறந்த குழந்தைகளை பயத்தில் உறைந்த சமூகம்தான் வரவேற்கிறது. இங்கே பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அமைதி என்றால் என்னவென்று தெரியாமல் உள்ளனர்”

க்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி இன்று (01.01.2023) 311-வது நாள். கடந்த பெப்ரவரி மாதம் 24ந் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. வெறும் இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தான் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. க்ரெம்ளினில் இருந்து வந்த தகவலில் இது ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கை என்றே கூறப்பட்டது. ஆனால், ரஷ்யா முன்னேறிய வேகம் உலக நாடுகளை பிரம்மிக்க வைத்தது. நேட்டோ நாடுகளிடம் குறிப்பாக அமெரிக்காவிடம் உதவி கோரிய ஜெலன்ஸ்கி இன்று வரை போரை எதிர்கொண்டு வருகிறார். ஆனால் அதன் பக்கவாட்டு விளைவுகள்தான் உண்மையிலேயே இது போர்களுக்கான காலம் இல்லை என்பதை அன்றாடமும் உணர்த்தி வருகிறது.

போருக்கான காரணம் என்ன? – உக்ரைன் தன்னை நேட்டோவில் இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தது. அதற்காக விண்ணப்பித்தது. ஆனால் அது பரிசீலனைக்கு வரும் முன்னரே ரஷ்யா தனது கண்டனத்தை முன்வைத்து. அமெரிக்கா அங்கம்வகிக்கும் நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் அதன் மூலம் தனது நாட்டின் இறையாண்மைக்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று எதிர்த்தது, எச்சரித்தது. எச்சரிக்கைகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் உக்ரைன் எல்லையில் பெருமளவில் படைக் குவிப்புகளும் நடந்தது. திடீரென பெப்ரவரி 24 அதிகாலையில் உக்ரைன் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இன்றும் ரஷ்யாவின் நிலைப்பாடு நேட்டோவில் உக்ரைன் இணையக் கூடாது என்பதாகத்தான் இருக்கிறது.

ஈகோவும் ஈகையும்: ஆனால், ‘எங்களை நேட்டோவில் இணைத்துக் கொள்ளுங்கள்’ என்ற கோரிக்கை வைத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாளடைவில் அந்த அணியில் இல்லாமலே அந்த அணியில் இருக்கும் உறுப்பு நாடுகள் பெறும் அத்தனை உதவிகளையும் அனுபவித்து வருகிறார். இது எந்த அளவுக்கு அவருக்கு ஒரு சௌகரியமான நிலையைக் கொடுத்தது என்றால், அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “நீங்கள் கொடுக்கும் நிதியுதவி வெறும் தானம் என்று நினைக்காதீர்கள். இது முதலீடு. இது ஜனநாயகம், பாதுகாப்புக்கான முதலீடு. இந்த அவையில் நான் உரையாற்றுவது பெருமைக்குரியது. எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. உக்ரைன் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. பதிலடி கொடுக்கிறது. அதிபர் பைடன் எங்களுக்கு துணை நிற்பதிரைன் ஒருபோதும் ரஷ்யாவிடம் சரணடையாது” என்று முழங்கும் அளவுக்கு சௌகரியத்தை (comfort) கொடுத்துள்ளது.

இதற்கிடையில், போரினால் ஏற்பட்டுள்ள பக்கவாட்டு சிதைவுகளையும் பார்க்க வேண்டும். முதலில் நேட்டோவுக்குள் ஏற்பட்டுள்ள குமுறல். எல்லாம் மேலே இருக்கவன் பார்த்துக் கொள்வான் என்ற சினிமா காமெடியைப் போல் நேட்டோ, அமெரிக்கா மீது பாரத்தைப் போட்டு போரை எதிர்கொண்டு சவால் விடுத்துவருகிறார் ஜெலன்ஸ்கி.

ஆனால், ரஷ்யாவுடன் நேரடியாக போரில் ஈடுபடுவது மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கும். அதேவேளையில் ரஷ்யா, உக்ரைனை வெல்ல அனுமதிப்பதும், அதனுடைய இராணுவ பலத்தை உலகிற்கு பறைச்சாற்றுவதாகிவிடும். அப்படியென்றால் வெறும் ஆயுத உதவிகளை மட்டும் வழங்கினால், அது போரில் நேரடியாக ஈடுப்பட்டதாகவும் இருக்காது ரஷ்யாவுக்கும் செக் வைத்ததாக இருக்கும் என்ற கணிப்புடன் அமெரிக்கா மேற்குலகை திரட்டிக் கொண்டு களமிறங்க இப்போது உறுப்பு நாடுகள் ஆயுதப் பற்றாக்குறையால் விழி பிதுங்கி நிற்கின்றன.

இந்தச் சூழலில் தனது ஈகோவால் வெளிப்பட்ட ஈகையை நிறுத்த முடியாமல் முழுப் பொறுப்பையும் தோளில் சுமக்கும் சூழல் உருவாகியுள்ளது. ‘ரஷ்யா தோல்வி’ என்ற ஒரேயொரு வார்த்தையைக் கேட்பதற்காக செய்யும் உதவிகள் எல்லாம் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை இப்போது அமெரிக்காவும், நேட்டோவும் உணரத் தொடங்கியுள்ளன. இவையெல்லாம் ரஷ்யாவுக்கும் நன்றாக தெரிந்திருக்கிறது என்பதற்கு மத்தியில் தான் சவால்களும், சமாதான முன்னெடுப்புகளும் நடக்கின்றன.

ஒரு நேட்டோ… இரு பேரழிவு… – 2021 ஆகஸ்ட் மாதத்தை உலகம் மறந்திருக்க முடியாது. காரணம், ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகளும் அமெரிக்க இராணுவமும் முழுமையாக வெளியேற ஆரம்பித்தது. அதன் நீட்சியாக ஆளும் அரசை விரட்டியடித்து தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. விளைவு அங்கு பசி, பட்டினி, மனித உரிமைகள் மீறல், பெண் கல்விக்கு தடை, பெண்களின் அடிப்படை சுதந்திரம் பறிப்பு என எண்ணற்ற பேரழிவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் நிலையான ஆட்சியை அமைக்க உதவுவோம், தலிபான்களை வேரோடு அழிப்போம் என்றெல்லாம் சூளுரைத்துதான் அமெரிக்க, நேட்டோ படைகள் அங்கே களமிறங்கின. ஆனால் இன்று ஆப்கனின் நிலை என்னவாக இருக்கிறது என்பதற்கு பசித்த வயிறுகள் தான் சாட்சியாக இருக்கின்றன.

ஆப்கனில் அமெரிக்காவும், நேட்டோவும் தானாக ஆஜரானது. உக்ரைனில் அது நேரடியாக ஆஜராக அந்நாடு மன்றாடிக் கொண்டிருக்கிறது. அந்த விருப்பத்தினால் அங்கிருந்து கோடிக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். கோதுமையையும், சூரியகாந்தி வித்துக்களையும் உலகிற்கே ஏற்றுமதி செய்து கொண்டிருந்த உக்ரைன் உணவுக்காக உலக நாடுகளின் உதவிகளை எதிர்நோக்கியிருக்கிறது. ஆயுதங்களாகவும், மருந்துகளாகவும், நிதியாகவும், உணவுப் பொருட்களாகவும் மேற்கு உலகம் தரும் ரேஷன்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

பிரச்சினையை இழுத்துப் போட்டுக் கொண்ட அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இந்த சிக்கலில் இருந்து எவ்வித பாதிப்பும் இல்லாமல் ரஷ்யாவின் ஏளனத்துக்கும் உள்ளாகாமல் வெளியே வேறுவிதமான உத்திகளைக் கையாளலாம். ஆயுதங்களின் அளவைக் குறைக்காமல் தரத்தைக் குறைக்கலாம். இன்னும் பிற உதவிகளின் அளவைக் குறைக்கலாம். இதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாமல் இல்லை. அப்படியான சூழலில் 2021-ல் ஆப்கன் போல் 2022-ல் உக்ரைன் என்றாகலாம்.

இப்போதும் பொருந்தும் என்பதை உணர்வார்களா? – உக்ரைன் போர் தொடங்கி சரியாக 14-வது நாளில் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி இன்ஸ்டாகிராமில் I Testify.. என்ற தலைப்பில் ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருந்தார். அதில், “இந்தப் போருக்கு இடையே பிறந்த குழந்தைகள், பேஸ்மென்ட்டின் மேற்கூரையையே முதலில் பார்க்கின்றன. அடித்தளத்தில் இருக்கும் இறுக்கமான காற்றையே சுவாசிக்கின்றன. அந்தக் குழந்தைகளை பயத்தில் உறைந்த சமூகம் தான் வரவேற்றுள்ளது. இங்கே பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அமைதி என்றால் என்னவென்று தெரியாமல் உள்ளனர்” என்று வேதனை தெரிவித்திருந்தார்.

ஏனெனில், இன்றும் கூட அவர் அந்த சாட்சியை திரும்ப சொல்லலாம் என்றளவில்தான் பதற்றம் நிலவுகிறது. உணவு தட்டுப்பாடு, மருத்துவமனைகள், பள்ளிக்கூடஙக்ள் போன்ற கட்டமைப்புகளுக்கு கடும் சேதமடைந்துள்ளன. உறையவைக்கும் குளிரில் மின்சாரம் இல்லாமல் சத்தமில்லாமல் உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. நிமோனியா, ஹைபோதெர்மியாவால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ள்து. 78 லட்சம் உக்ரைனியர்கள் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அதில் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க அச்சமாக இருப்பதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

போர் பாதிப்பு தனிப்பட்டதா? – இந்தப் போரில் உக்ரைன் மட்டும்தான் பாதிக்கப்பட்டதா என்றால் இல்லை. உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதியாவது பெருமளவில் தடைபட்டுள்ளது. சர்வதேச சமூகம் இந்த ஏற்றுமதியை சுமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும் பாதிப்பு முயல் வேகத்திலும் தீர்வுகள் ஆமை வேகத்திலும் நடந்தேறுகின்றன. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் சில உக்ரைன் கோதுமை இல்லாமல் இன்னும் மோசமான பட்டினி சாவுகளை சந்திக்கின்றன. சோமாலியா, எதியோபியா, கென்யா போன்ற நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைனிலிருந்து ஏற்றுமதியான தானியங்கள் உலகம் முழுவதும் 40 கோடி மக்களின் பசியை போக்கிக் கொண்டிருந்தது என்பதை உக்ரைனும், ரஷ்யாவும், அமெரிக்காவும், நேட்டோ உறுப்பு நாடுகளும் உணர வேண்டியது மிகவும் அவசியம்.

உக்ரைன் தானிய ஏற்றுமதி மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டதால் ஐரோப்பிய நாடுகள் பலவும் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளன. எண்ணெய், எரிபொருள் ஏற்றுமதியில் ரஷ்யா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதுவும் ஐரோப்பிய நாடுகள் தான் இந்த ஏற்றுமதியால் பெரும் பலனடைந்துவந்தன. உக்ரைன், ரஷ்யாவிடமிருந்து சமையல் எண்ணெய், எரிபொருள் என தாராளமாக இறக்குமதி செய்து கொண்டிருந்தன. அவை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் பைப்லைன் வழியான எரிபொருளை முற்றிலுமாக நிறுத்துவோம் என்ற எச்சரிக்கையை ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு அவ்வப்போது கடத்திக் கொண்டே தான் இருக்கிறது.

போர் பாதிப்பு என்பது தனிப்பட்டது (isolated) அல்ல என்பதை உணர்ந்து உக்ரைன், ரஷ்யா மக்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக மக்களுக்காகவும் இந்தப் போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஏனெனில் போர்களின் காலம் முடிந்துவிட்டது. எல்லைக் கோடுகளால் மட்டுமே பிரிந்திருக்கும் உலக நாடுகள் இன்றைய காலக்கட்டத்தில் வர்த்தகத்தால், தொழிலால், கல்வியால், மக்களின் தொடர்புகளால் ஒரே எல்லைக்குள் தான் இருக்கின்றன. இங்கே ஒவ்வொரு வினைக்கும் பரவலான ஒட்டுமொத்தமான எதிர்வினையே ஏற்படுகிறது. எல்லைக் கோடுகள் எல்லாம் வெறும் மாயை என்பதை கொரோனா பெருந்தொற்றும் உறுதி செய்து கொண்டிருக்கிறது. இது போருக்கான காலம் அல்ல என்று ரஷ்யாவிடம் இந்தியா தெரிவித்தது எல்லோருக்கும் பொருந்தக்கூடிய தகவல். ஆம், உண்மையில் இது போருக்கான, பழிவாங்கலுக்கான காலம் இல்லை தான். புதிய வருடம் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்.