தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக பதிவு

செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் பிறந்து, 2003ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்று, தற்போது திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒருவர் தாக்கல் செய்த மனுவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இவருக்கு எதிராக கடந்த டிசம்பர் 15ஆம் திகதி இந்திய புலனாய்வுப்பிரிவு வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்தநிலையில் மத்திய அரசின் அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின்பேரிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதனை ரத்துச்செய்யவேண்டும் என்றும் குறித்த பொதுமகன் சென்னை நீதிமன்றை கோரியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள மனுதாரர், தாம் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தம்மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் 2020 ஆண்டிலும் தம்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அந்த வழக்கு தொடர்வதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.