ஒரு மன நோயாளிக்கான மிகப்பெரிய சவால் அவருக்கான சரியான வாழ்க்கையைக் கண்டடைவதுதான். ஆனால், உண்மையில் அதுதான் எல்லா மனிதர்களுக்குமான சவாலும்கூட! நான் இன்னும் என் மனநிலை பாதிப்பிலிருந்து மீளவில்லை. நான் முழுமையாக மீளவும் மாட்டேன். ஆனால், இந்த எதார்த்ததுக்குள் என் வாழ்வை நான் கண்டடைந்துகொண்டது மட்டுமே எனது அதிர்ஷ்டம்.”

மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவரின் பதிவு இது. எலின் ஆர் சாக்ஸ் என்பது அவரது பெயர். இப்போதும் அவர் தொடர் சிகிச்சையில் தான் இருக்கிறார்.

இவ்வளவு தத்துவார்த்தமான சிந்தனையைக் கூட மனச்சிதைவு நோயாளியால் வெளிப்படுத்த முடியும். அதனால், மனச்சிதைவாலோ அல்லது வேறு மனநோயாலோ களங்கப்படுத்தி அவர்களை சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்காதீர்கள். அவர்களின் வேதனை, நகைப்பு, நம்பிக்கை, அனுபவங்கள், அழுகை, கோபம் என எல்லாமே மதிக்கத்தக்கவையே.

மே 24 சர்வதேச மனச்சிதைவு நாள் கடைபிடிக்கப்படும் நிலையில், அந்நோய் பற்றி பல கோணத்திலும் ஒரு புரிதலை ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்திய நாட்டில் ஆறாயிரம் மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இந்தச் சூழலில் மனச்சிதைவு நோயாளிகளுக்கான சவால்கள் எண்ணிலடங்காதது. மனச்சிதைவு நோயானது உலகம் முழுவதும் 300 பேரில் ஒருவருக்கு ஏற்படுகிறது. மற்ற மனநோய்களைப் போல் இது பொதுவானது அல்ல. இந்த நோய் பதின்பருவத்தின் பின் பகுதியில் அல்லது 20களில் ஆரம்பிக்கிறது. பெண்களைவிட ஆண்களுக்கு இந்த நோய் இன்னும் இளம் வயதில் ஏற்படுகிறது. சாதாரண மன நோயையே இயல்பானதாக ஏற்றுக்கொள்ளும் சூழல் இல்லாத நம் இந்திய சமூகத்தில் மனச்சிதைவு நோய் பற்றி இன்னமும் கூட புரிதல் இல்லை என்பது வருந்தத்தக்கது.

மனச்சிதைவு நோய் என்றால் என்ன?

மனச்சிதைவு நோயாளிக்கு இந்த சமூகம் சில அபத்தமான விளக்கங்களை வைத்திருக்கிறது. மனச்சிதைவு நோயாளி என்றால் சைக்கோ கில்லர், சீரியல் கில்லர், பெண்களை அல்லது குழந்தைகளை கொலை செய்து ரசிக்கும் நபர், சக மனிதர்களை தாக்கி வன்முறையில் ஈடுபடும் நபர், பெற்றோரின் தவறான வளர்ப்பு, மோசமான சமூகம் மனச்சிதைவை ஏற்படுத்தும் என்ற சித்தரிப்புகளும் உண்டு. ஆனால் இதில் எதுவுமே உண்மையில்லை.

எல்லா நோய் போல் மனச்சிதைவுக்கும் சாதி, மதம், இனம், மொழி, பாலினம், தேச எல்லை என்ற பேதமும் இல்லை. இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் இதுதான் என்று உறுதிபட எந்த ஆராய்ச்சியாளரும் இதுவரை வரையறுத்துக் கூறியதில்லை. சில நேரங்களில் மரபணு கோளாறுகள், சில நேரங்களில் சுற்றுப்புற அழுத்தங்கள், சில நேரங்களில் பிற மனநோய்கள் என எது வேண்டுமானாலும் மனச்சிதைவுக்கு அடித்தளமாக அமையலாம் என்றே கூறுகின்றனர். அளவுக்கு அதிகமான கானபிஸ் எனப்படும் போதை வஸ்துகளைப் பயன்படுத்துவதால் மனச்சிதைவு நோய் ஏற்படலாம் என்ற காரணியை மட்டும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

அறிகுறிகள் என்னென்ன?

மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட நபர் இல்லாத ஒன்றை இருப்பதாக உறுதிபட நம்புவார். சில நேரங்களில் யாரோ தன்னுடன் பேசுவது போல், தன்னை இயக்குவதுபோல் நம்புவார். அவரது கண்களுக்கு சில உருவங்கள் தெரியலாம். சில குறிப்பிட வாசனையோ, துர்நாற்றமோ அவரை ஆட்கொண்டிருப்பதாக உணரலாம். என் மேல் புழுக்கள் ஊர்கின்றன, என் சாப்பாட்டில் விஷம் உள்ளது என்று விந்தையான வாதங்களைச் சொல்லலாம். அவர்களது சிந்தனையில் சீர் இருக்காது. பேச்சும் அர்த்தமற்றதாக, முரணானதாக மாறியிருக்கும். எந்த இலக்கும் இல்லாதவராக தென்படுவார். முந்தைய நாள் வரை வேலைக்கு சென்று வந்த இளைஞன் திடீரென்று அறைக்குள் பூட்டிக்கொண்டு வெறித்த பார்வையோடு மணிக்கணக்காக மவுனிக்கலாம். அனைவரிடமும் பேச்சை நிறுத்திவிடலாம். தனக்குத்தானே ஏதோ புன்முறுவல், சிரிப்பு, பேச்சு என இருக்கலாம். தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதையும் குறைக்கலாம். சமூகத்திலிருந்து ஒதுங்கி, சுய சுகாதாரத்தைக் கூட தவிர்த்து தென்படலாம். வாரக் கணக்கில் குளிக்க மறுக்கலாம். இவையெல்லாம் உங்கள் உறவுகளுக்கோ, நட்புகளுக்கோ ஏற்பட்டால் இவை மனச்சிதைவின் அறிகுறிகள். பேய் பிடித்துவிட்டதாகக் கருதாமல் உடனடியாக மனநல மருத்துவரை அணுகுங்கள். மனச்சிதைவு நோய்க்கு சிறந்த சிகிச்சை ‘Early inervention’ அதாவது ஆரம்பநிலையிலேயே மருந்துகளைக் கொடுத்தல்.

தற்போது, ‘கவுன்சிலிங்’ எனும் மனவியல் சிகிச்சை முறை மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. மனச்சிதைவு நோய்க்கு கவுன்சிலிங் உதவாது. தன்னிலை உணராது, நிஜத்திலிருந்தும் இயல்பிலிருந்தும் எண்ண ஓட்டம் பிறழ்ந்த நிலையே மனச்சிதைவு. இங்கே உன் பிரச்சினையை, சூழலை, உன் செயல்களை, அவற்றைத் தூண்டும் சிந்தனை முறையைப் புரிய வைக்கிறேன் என்று ‘கவுன்சிலிங்’ நடத்துதல் உதவாது. மனச்சிதைவுக்கு மருந்து அவசியம். அறிவியல் மருத்துவம் அவ்வப்போது புதுவகை மருந்துகளை உருவாக்கிக் கொண்டு தான் இருக்கிறது.

மனச்சிதைவால் பாதிக்கப்பட்டோரில் ஒரு சிலருக்கு மட்டும் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் திரும்பத் திரும்ப தாக்கம் அதிகரிக்கலாம். மோசமானதாகவும் இருக்கலாம். மற்றபடி மருந்துகளை விடாமல் உட்கொண்டுவந்தால் குடும்பமும் சமூகமும் ஆதரவுக்கரம் நீட்டினால் நிச்சயமாக இயல்புக்குள் இருக்கலாம்.

ஆரம்பக் கட்டங்களில் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் கோபத்துடன் இருக்கலாம், அவர்களிடம் வாதம் செய்வது உதவாது. அவர்கள் சிகிச்சைக்கு மறுக்கலாம், அந்தக் கட்டத்தில் வற்புறுத்துவது அவர்களது உரிமை மீறலோ, மனிதாபிமானமற்ற காரியமோ அல்ல- அது அவர்கள் விரைவில் தன்னிலை உணர்ந்து வாழ்வில் இணைய உதவும் கருணையும் அன்பும் மிகுந்த செயலாகும்.

பாதிப்பின் தீவிரம் குறைந்து அறிகுறிகள் மறையும்போது, ‘எல்லாம் சரியாகிடுச்சே’ என்று மருந்துகளை மருத்துவர் அறிவுரை இன்றி நிறுத்துவது, இப்ப ஒரு கல்யாணம் பண்ணி வச்சுடலாம் என்று சோதிடம் பார்ப்பது போன்றவை முழுதாக குணமாகாத நோய் மீண்டும் வெளிப்பட வைக்கும். விட்டுவிட்டு மருத்துவம் பார்ப்பது குணமாகக் கூடிய நபரையும் நெடுங்கால நோயாளியாக மாற்றிவிடும்” என்று கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ருத்ரன்.

மனநல மருத்துவர் ருத்ரன்

காப்பீட்டு நிறுவனங்களும் மனநோயும்..

காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து நம் ஒவ்வொருவருக்கும் மாதத்துக்கு குறைந்தது 3, 4 அழைப்புகளாவது வரும். பல கவர்ச்சிகரமான திட்டங்கள் என நேர்த்தியாக பட்டியலிடுவார்கள். கோவிட் வந்த பிறகு அதைக்கூட மருத்துவக் காப்பீட்டில் கொண்டு வந்துவிட்டனர். ஆனால் ஒரு கோவிட் நோயாளி மனநோயாளியாக இருந்தால் அவருக்கு இன்சூரன்ஸ் கவர் ஆகாது. இதுதான் மனநோயாளிகளின் நிலைமை.

மாறிவரும் காலச்சூழலில் அதுவும் உலகமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள போட்டி உலகில் பள்ளிக்கூட மாணவன் தொடங்கி அரசியல் பிரமுகர் வரை மன அழுத்தங்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. இந்தியா முழுவதும் 43 அரசு மனநல மருத்துவமனைகளில் ஏழு கோடிக்கும் அதிகமானோர் மனநலப் பிரச்சினைகளுக்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், ஒரு லட்சம் மன நோயாளிகளுக்கு 0.3 மனநல மருத்துவர்கள், 0.17 செவிலியர்கள், 0.05 உளவியல் நிபுணர்களே இருக்கின்றனர்.

மனநோயாளிகள் பலரும் போதிய சிகிச்சை இல்லாமலேயே தீவிர மனநோயாளிகள் ஆகும் சூழலில் தான் நாம் இருக்கிறோம். அப்படியான சூழலில், மற்ற நோய்களுக்கு வழங்கப்படுவதுபோல் காப்பீட்டு நிறுவனங்கள் மனநோயையும் காப்பீட்டு வரம்புக்குள் கொண்டுவந்தால் அது நடுத்தர, ஏழை மக்கள் தரமான, தொடர்ச்சியான சிகிச்சையை மேற்கொள்ள பெரும் உதவியாக இருக்கும்.

ஐ.ஆர்.டி.ஏ.ஐ ( காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்) மனநோயாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்று தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மனநோய் பாதிக்கப்பட்டு உள் நோயாளியாக அனுமதிக்கப்படுவோர் காப்பீட்டுக்கு தகுதியானவர்கள். குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெறும் மனநோயாளில் அதற்கான க்ளெய்மை பெறத் தகுதியானவர்கள். தீவிர மனநோயாளிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் கேர் டேக்கர் காப்பீட்டு சலுகைகளைப் பெற்றுத் தரலாம். ஒருவர் மனநோய்க்கான காப்பீடு செய்திருந்தால். அந்த காப்பீட்டை எடுத்ததிலிருந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னரே அவர் அதிலிருந்து சலுகைகளை அனுபவிக்க இயலும். ஆகையால், பரம்பரை மனநோய் வரலாறு கொண்டவர்கள் இத்தகைய காப்பீட்டை எடுத்துக் கொள்வது நலம் என்று ஐஆர்டிஏஐ அறிவுறுத்துகிறது. வழிகாட்டுதல்கள் இப்படி இருக்க எந்த ஒரு காப்பீட்டு நிறுவனமும் பெரியளவில் இதைப் பின்பற்றுவதில்லை. அதேபோல் போதைப் பழக்கங்களால் ஏற்படும் மன நோய்கள் காப்பீட்டு சலுகை வரம்ப்புக்குள் வருவதில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் மனச்சிதைவு நோய், பை போலார் (Bipolar) என்றழைக்கப்படும் இரு துருவ மனநோய், போதை பொருட்களால் ஏற்படும் மனநோய், மூளை நரம்பியல் நோய்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள், உடல்நல பாதிப்புகளால் ஏற்படும் மனநோய், மன வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்படும் மனசிதைவுக்கான அறிகுறி நோய்கள் உள்ளிட்ட 6 மனநோய்கள் முதல்வர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டன. ஆனாலும், அதை முழுவீச்சில் செயல்படுத்துவதில் இன்னமும் சில இடர்பாடுகள் இருக்கின்றன.

பொருளாதார நிபுணர் நாகப்பன்

பொருளாதார நிபுணர் நாகப்பன் கூறுகையில், மனநோயாளிகளை காப்பீட்டு வரம்புக்குள் கொண்டுவர தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு தயக்கம் இருப்பது உண்மைதான். இதற்குப் பதிலாக மத்திய, மாநில அரசுகளே மனநோயாளிகளுக்கான விரிவான காப்பீட்டுத் திட்டத்தை அறிவிக்கலாம். அது ஏழை, நடுத்தர மக்களுக்கு தரமான சிகிச்சையை நிச்சயம் உறுதி செய்யும். அதுமட்டுமல்ல மனநோயாளிகளைக் கொண்ட சாதாரண குடும்பங்கள் பல அவர்களை பராமரிப்பதில் மிகப்பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றன. பல குடும்பங்களில் மனநோயாளியை பராமரிப்பவர் வேலைக்கும் செல்ல வேண்டும், நோயாளியையும் கண்காணித்து கவனிக்க வேண்டிய சூழல் உள்ளது. அத்தகையோருக்காக டே கேர் அமைப்புகளை ஏற்படுத்தலாம். பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் தமிழக அரசு இதை முன்னோடி திட்டமாக செயல்படுத்தலாம் என்றார்.

மனநோய்களை அனைத்து மாநில அரசுகளும் மருத்துவக் காப்பீட்டில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மனநல மருத்துவர்கள் பலரின் கோரிக்கையாக இருக்கிறது.

மறுவாழ்வை உறுதி செய்வோம்:

மனச்சிதைவு ஒரு தீவிர மனநோய், நாட்பட அதன் நிலை மோசமாகி வரும் என்பதால் ஆரம்பத்திலேயே சிகிச்சை தந்தால் நல்ல பலன்கள் பார்க்கலாம். இது குறித்து மிகவும் தெளிவான தொடர்ந்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தான் முதல் தேவை. மனச்சிதைவு நோயைப் பொருத்த வரையில், அதன் அறிகுறிகளின் தீவிரம் மட்டுப்படும்போது, சமூகத்தில் மீண்டும் இவர்கள் இணையவும் பணியாற்றவும் மறுவாழ்வுப் பயிற்சிகள் அவசியம். மறு வாழ்வு திட்டம் ஆலோசனை, சமூகத்திறன் பயிற்சி, தொழிற்பயிச்சி, தொடர்புதிறன் பயிற்சி என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

மனச்சிதைவு சிகிச்சையில் மிக முக்கியமான பணிகளில் ஒன்று அவர்களுக்கான மறுவாழ்வை உறுதி செய்தல். சில தனியார் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டிருந்தாலும், அரசு மருத்துவமனைகளிலும் இது இன்னும் அதிகம் செயல்பட வேண்டும்.

இது சவால்மிக்க, அலுப்பூட்டும் பணி என்பதால் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். அப்படியான சேவையை அரசே வழங்கி மனநோயாளிகளின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யும்போது இந்நோயாளிகள் மீதான சமூகப் பார்வையும் மாறும்.

மே 24: சர்வதேச மனச்சிதைவு நாள்