ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது. 

அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. போராட்டத்தில் கலவரம் செய்ததாக 18, 200 பேர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தி ஈரான் அரசு கடுமையான தண்டனை விதித்து வருகிறது. இதில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பொது இடத்தில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

ஈரான் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தன.

இதற்கிடையே, ஈரானிய நடிகை தரானே அலிதூஸ்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரானின் அரசு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார். 

அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் நடிகை தரானே அலிதூஸ்தி வீடியோ வெளியிட்டதாகக் கூறி அவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. 

நடிகை தரானே அலிதூஸ்தி ஈரானின் பிரபல நடிகை ஆவார். அவர் நடித்த ‘தி சேல்ஸ்மேன்’ திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. 

தரானே அலிதூஸ்தி ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.