தலிபான்கள் ஆட்சி செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உலகம் முழுவதும் இருந்து தலிபான் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட சவுதி அரேபியா, கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகள்கூட கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், ஐ.நா. உயர் தூதர் மார்கஸ் போட்செல் இன்று தலிபான் அரசின் உயர் கல்வித்துறை மந்திரி நிதா முகமது நதீமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பெண்களின் உயர்கல்வி தடை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்த தடையை உடனடியாக நீக்கி, பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என ஐநா தூதர் வலியுறுத்தி உள்ளார். இதற்கு மந்திரி நதீம் கூறிய பதில் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பெண்களுக்கான உயர் கல்விக்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்ட பின்னர் உயர்கல்வி மந்திரியை சந்திக்கும் முதல் சர்வதேச அதிகாரி மார்கஸ் போட்செல் ஆவார்.
என்ஜிஓ மீதான தடையை வெளியிட்ட பொருளாதாரத் துறை மந்திரி காரி தின் முகமது ஹனிப், துணைப் பிரதமர் அப்துல் சலாம் ஹனபி, உள்துறை மந்திரி சிராஜுதீன் ஹக்கானி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் ஆகியோரையும் போட்செல் சமீபத்தில் சந்தித்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து விவாதித்தார். ஜனவரி 13ம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பற்றி விவாதிக்க உள்ள நிலையில், இந்த ஆலோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இணைந்திருங்கள்